கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைக் கோட்பாடுகள் – முனைவர் ப.கமலக்கண்ணன்

Print Friendly, PDF & Email

கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைக் கோட்பாடுகள்

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

கவிதை என்பது மரபுக் கவிதையாக இருந்தாலும், புதுக்கவிதையாக இருந்தாலும் அது காலம் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும். படைத்த கவிஞர் மறைந்த பிறகும் வாழ வேண்டும்.

கவிதை என்பது கதையல்ல. விதை தரமான விதையாக இருக்க வேண்டும். மண்ணில் ஊன்றப்பட்ட அந்த விதை நன்கு முளைத்து வளர்ந்து பல்வேறு கிளைகளாகப் படர்ந்து இந்தச் சமுதாயத்திற்குப் பயன் தர வேண்டும்.

புதுக்கவிதையில் மிகுதியாக நிகழ்கால நடைமுறைகளையே பாட பொருளாக இருப்பதால் சமுதாயத்தின் நிறைகுறைகளை அறிந்து கொள்ளப்பயன்படுகிறது. மேலும் செறிவானச் செய்திகளைத் தருவதால் பெரும்பான்மையான மக்கள் எளிதில் சுவைக்க முடிகிறது.

இலக்கியப் படைப்புகள் வெற்றியினைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைவன அந்த இலக்கியங்களின் வடிவமும், பாடுபொருளும் என்பர். கவிஞர் தான் கூற வந்த கருப்பொருளை விரும்பிப் படிக்கும் நேயர்களுக்கு உணர்த்தும் முகத்தான் தமது படைப்புகளில் பல்வேறு உத்திகளையும், மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றனர். மரபுத் தமிழை முறையாக பயின்ற கவிஞர் முருகு சுந்தரம் புதிய முறையில் கவிதை நூல்களைப் படைத்துள்ளது. இங்குக் குறிப்பிடத்தக்கது. அவரது கவிதையின் தன்மைகளையும் நடைப் பண்புகளையும் ‘எரிநட்சத்திரம்’ ‘தீர்த்தக் கரையினிலே; ஆகிய இரு நூல்களின் வாயிலாக அறிவோம்.

கவிஞர் முருகுசுந்தரம் தமது படைப்பில் கவிதை என்பதற்கு கூறும் இலக்கணம் மிகவும் நயம்படவும், சிறப்பானதாகவும் அமைந்துள்ளது.

‘புதுக்கவிதை என்பது முழுவதுமாய் யாப்பமைதி – ஓசை அமைப்பு ஆகியவற்றிலிருந்து வெட்டிக் கொண்டு விடுபட்டு அமைவது அல்ல. சட்டையைக் கழற்றுவதுபோல் பாவனை செய்து உதறி, மறுபடியும் அணிந்து கொள்ளும் காரியம்’ என்று கவிஞர் மீராவின் கூற்றிலிருந்து மாறுபட்டு அமைந்துள்ளது.

கவிஞர் முருகுசுந்தரம் தொடக்கக் காலங்களில் முழுக்க மரபாளராக இருந்தவர். மரபின் இலக்கணங்களை நன்கு அறிந்தவர். புதுமையின் கூறுகள் அனைத்தையும் உள்வாங்கியவர்.

கவிதை ஆற்றல் என்பது பொதுவானது

ஆற்றல் மிக்கவர்களே

மரபிலும் புதுக்கவிதையிலும்

வெற்றி பெறுகிறார்கள்

            என்ற இலக்கணத்திற்கு ஏற்ப இரண்டு ஆற்றல்களையும் ஓர் உருவாய் பெற்றவர் இவர். கவிஞர் முருகுசுந்தரம் பழமையைப் படித்து புதுக்கவிதைகளில் குறியீடுகளாக படிமங்களாக, சமகாலத்தின் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்து வெளிப்படுத்துவதில் வல்லவர்.

இவரின் கவிதை மொழியின் ஆளுமையில் கடினத்தன்மை இருந்தாலும் கவிதைகள் வாசிப்போரும் எளிதில் புரியும் தளத்திலேயே அமைந்துள்ளன. மொழி நடையில் மற்றவடமிருந்து தனித்த ஓர் அடையாளத்தைக் காணமுடிகிறது. தொடக்க காலங்களிலிருந்து பின்பற்றி எந்த கவிதையின் தன்மைகளையும், கூறுகளையும் விடுத்து புதிய முயற்சியாகவும், வாசகனின் புரிதல் தன்மைக்கு முக்கியத்தவம் தரும் வகையிலும் கவதை அமைய வேண்டுமென்று கவிஞர் முருகுசுந்தரமம் தெரிவிக்கிறார்.

தோற்றப் பொருளிலிருந்து

விடுதலைப் பெற்று

படிக்கும் வாசகனின்

பக்குவத்திற் கேற்ப

நுண் பொருளாகவும்

பருப் பொருளாகவும்

விசாலப்படும்

வாமனத் தன்மை

இன்றைய கவிதை

                 மேற்கூறிய கருத்தில் தெளிந்த சிந்தனையும் இன்றைய வளரும் கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகவும் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.

முந்தைய காலத் தமிழில் காவியங்களையும் படைத்துப் படைப்பாளிகள் அனைவரும் இயல், இசை, நாடகம் குறித்த அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால் இன்றோ ‘உள்ளடக்கம்’ ஒன்றே மட்டுமே உயர்பொருளாக எண்ணிக் கொண்டு எண்ணற்றப் புதுக்கவிஞர்கள் புற்றீசல்கள் போல பெருகி விட்டதை எடுத்துக் கூறும் கவிஞர்.

பழையை காலத்தில்

கலைகளுக்குப்

பொதுத் தன்மை அதிகம்

இளங்கோவடிகள்

ஒரு கவிஞர்

இசை மேதை

நாடக ஆசிரியர்

             என்று எடுத்தக்காட்டுவதோடு மட்டும் தனது கருத்தை நிறுத்திக் கொள்ளாமல் இன்றையப் படைப்பாளிகள் சமுதாயத்தின் பல்வேறு கூறுகளையும் தமது படைப்புகளில் உள்ளார்த்தமாக வைத்து படைக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

கவிதையைப் படைக்கக் கூடிய கவிஞர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்தின் அவலங்களையும், வாழ்வின் சிக்கல்களையும் எடுத்துக் கூறி வருவது தான் இயல்பு. அப்போது தான் மக்களை அவர்கள் நெருங்கவும் முடியும் அதைத்தான்.

கவிதையின் கருப்பொருள்

உயர்வானதாக இருக்க வேண்டும்

கவிதையின் கருப்பொருள்

மட்டமானதாக இருந்தாலும்

அதன் பயனும்

அது வெளிப்படுத்தும் உணர்வுகளும்

மக்களினத்தை

உயர்த்துவனவாக இருக்க வேண்டும்.

              கவிதையில் கூறப்படும் பொருள் எதுவானதாக இருந்தாலும் மக்களின் வாழ்வும் அதன் சிறப்பை உயர்த்துவனவாக இருந்து நல்ல நெறிகளை எடுத்துக் கூறியும் இடித்துரைப்பதை இடித்துக் கூறியும் அமைய வேண்டும். கவிதைக்கு இலக்கணம் கூற வந்த கவிஞர்,

கருத்தாழமும்

உணர்ச்சி அழுத்தழும்

கவிதையின் இரு கண்கள்

             என்று கூறுவதிலிருந்து கவிதை வெற்றி பெற வேண்டுமெனில் எடுத்துக் கொள்ளும் கருத்தையும், அதை வெளிப்படுத்தும் முறையில் அழுத்தழும் இருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தூண்டுகிறார்.

இன்றைய இளைஞர்களின் கவிதைகளில் பெரும்பாலும் கருத்துக்கள் முழுமை பெறாமல் சிறுசிறு தொடர்களாக அமைந்துள்ளன.

உணர்ச்சித் துண்டங்களாக

அந்தரத்தில் தொங்கும்

அரைத் தொடர்கள் என்றும்

எதுகை மோனை

ஓசை யொழுங்கு

ஏதுவுமே இல்லாத

குறைப் பிரசவம்

                   புதுக்கவிதையில் படிமம், அழகியல், குறியீடு, செவ்வியல், இருப்பியல், மீமெய்ம்மையியல் என அனைத்து இயல்புகளையும் கற்றுத் தெளிந்து கவிஞர் தந்த புதுக்கவிதைத் தொகுப்பு ‘வெள்ளை யானை’ என்பதாகும்.

காணிநிலம் வேண்டும் பாரதி. ஏன் வேண்டும் என்பதற்கானன் காரணங்களையும் அடுக்கியுள்ளார். பாவேந்தரின் சீடரான இவர் ‘காணி நிலம் வேண்டாம்’ ஆனால் மற்றொன்று வேண்டும் என்கிறார்.

அவன் சொன்னானே

பாதகம் செய்பவரைக் கண்டால்

மோதி மிதித்து

அவர் முகத்தில் உமிழும்

நெஞ்சுரத்தை மட்டும்

எனக்குக் கொடு

அது போதும் – என்கிறார்

                   கவிஞரின் சமுதாயத்தின் மீதான கோபம் நியாயமானதே. இந்தக் கோபத்தை ‘அரண்மனை அலிகள்’ மீதும் காட்டியுள்ளார்.

இன்றும் 

ஆளும் வர்க்கத்தின்   

அந்தரங்க செயலாளர்களாகவும் 

ஏன்   தளபதிகளாகவும்

கூட   இடம் பெயர்ந்து விட்டனர்.

எனச் சாடியுள்ளார்.

கவிதையின் அழகுளாக காட்சித் தரும் கூறுகள் இயல்பாக அமைந்திருந்தால் படிக்கும் வாசகர்களின் மனத்தில் கவிதையின் கருப்பொருள் எளிமையாக பதிந்து விடும். மேலும் கூற நினைத்ததை சுவைஞன் முழுமையாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.

காலங்காலமாக  சமுதாயத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு சாதனம் கவிதை. கவிஞன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். கவித்துவம் மக்களின் மகத்துவம் அறிந்தது. ஆட்சி அதிகாரங்களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது. நாட்டிற்கு நல்லதை விளைவிக்க தன்னாலானப் பணியை நிறைவாகவே செய்து வந்துள்ளது. கவிஞர் முருகுசுந்தரத்தின் நெறிகளும் கவிதையின் கோட்பாடுகளும் வளரும் கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் அமையும் என்றால் அது மிகையாது.

குறிப்புகள்

  1. செகந்நாதன்.ஆ., – புதுக்கவிதை – ஒரு திறனாய்வு, திலகன் பதிப்பகம், சென்னை.
  2. செயராமன்.ந.வீ. – புதுக்கவிதையியல், கதிரவன் அச்சகம், சென்னை.
  3. தமிழவன் – இருபதில் கவிதை, ஸ்டார் பிரஸ், பாளையங்ககோட்டை.

———

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.