குழந்தைப் பாடல்களில் அறிவியல் சிந்தனைகள்

Print Friendly, PDF & Email

முனைவர்.சி.அங்கயற்கண்ணி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை சிக்கய்யநாய்க்கர் கல்லூரி, ஈரோடு.

குழந்தைகள் சிறுவர்களாக இருந்தாலும் புதுப்புதுப் பொருள்களையும் கருத்துகளையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் அறிவியல் படிப்படியாக வளர்ந்து வருகின்றது என்றாலும் கடந்த பத்தாண்டுகளில் ஆக்கபூர்வமான வளர்ச்சிகளைப் பெற்று வருகிறது. இதனால் இன்று உலகம் பெற்று வரும் நன்மைகள் பல. இன்றைய குழந்தைகள் வரும் காலங்களில் பல்வேறு படைப்புகளை உருவாக்கும் வல்லுனர்களாக மாறக் கூடும். எனவே, அறிவியலின் அதிசயங்களைக் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எடுத்துரைப்பது இன்றியமையாததாகும்.

குழந்தைகள் இன்பம் நிறைந்த கற்பனை உலகில் உள்ளம் தோய்ந்து ஒன்றுவதற்கு அழகுணர்ச்சிக் கவிதைகள் பயன்படுவது போல அறிவியல் திறன் பெற்று வளர அறிவியல் வண்ணமுடைய கவிதைகள் பயன்படும் எனலாம் எனும் சு.பாலசந்திரனின் கருத்து இங்குக் கவனிக்கத்தக்கது. குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்பித்தல் வளரும் பயிர் பாத்தியில் மழை பொழிந்தாற் போன்றது என்பார் வள்ளுவர். அவ்வகையில் அறிவியிலின் ஆற்றலால் தோன்றியுள்ள பல்வேறு வகையான சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் எளிய முறையில் பாடல்களின் வாயிலாக எடுத்துக் கூறும் உத்திகளைக் கவிஞர்கள் கையாண்டுள்ளனர்..

“பொறி மிதி வண்டி
பட பட என்று
போவதைப் பாருங்கள்
பொறிகள் இழுக்கச்
சுக்கான் திரும்பப்
போவதைப் பாருங்கள்
காலை நேரம் ரேடியோ
கடவுள் வாழ்த்துப் பாடுமாம்
மாலை நேரம் பாட்டுப்பாடி
மகிழ்ச்சி மெத்த வாட்டுமாம்”

மக்கள் அனைவருக்கும் உரிய நேரத்தில் உலகில் நடக்கும் பல அரிய செய்திகளை வழங்குதல் குழந்தைகளுக்குப் பயனள்ள பல குறிப்புகளை வழங்குதல் பொருள்களின் விலைப்பட்டியலைக் கூடத் தருதல் போன்ற பல்வேறு வகையில் வானொலி பயன்படுவதாகக் கவிஞர்கள் கவிதைகள் இயற்றி உள்ளனர்.

மிகவும் எளிதாகக் காலத்தை அறிந்து கொள்ள அறிவியல் தந்த கருவி கடிகாரம் ஆகும். கடிகாரத்தில் ஒன்று முதல் பனிரெண்டு வரை உள்ள எண்களைக் குழந்தைகள் எளிதில் அறிந்து கொள்ளவும், நேரம் கணக்கிடுவதை நன்கு தெரிந்து கொள்ளவும் கவிஞர்கள் பாடல்களின் மூலமாக அறிவுறுத்தப் புனைந்துள்ளனர்.

“முட்கள் இரண்டும் நில்லாமல்
முன்பின்னாகத் தொடர்ந்திடும்
சிறுமுள் சரியாய மணிகாட்டும்
பெருமுள் மணியின் துளி காட்டும்”

மேலும், எப்போதும் ஓய்வின்றி இயங்கி வரும் கடிகாரம் அலாரத்தின் போது சத்தம் எழுப்பி சரியான நேரத்தை காட்டுவதும், அதன் இயக்கம் மிகப் பெரிய அறிவியல் சாதனை என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிகவும் பயனளிப்பதாகும்.

பாவேந்தரின் பாடல் மோட்டார் பொறி வண்டியைக் கருவாக்கி அதன் ஓசையையும் தன்மையையும், குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அறிவியலின் உன்னதக் கண்டுபிடிப்பு செய்தித்தாள் ஆகும். இது அவன் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், வளர்க்கவும் பயன்படுகிறது.

“உலகில் நடக்கும் செய்திகளை
உடனுக்குடனே தெரிவித்து
நிலவும் செய்தித் தாளினையே
நித்தம் விரும்பிப் படிப்பாயே”

என்று பெ.தூரன் செய்தித்தாளின் சிறப்பினைக் குழந்தைகளுக்கு சுட்டிக் காட்டுகிறார்.

மக்களுக்குப் பரவலாகப் பயன்படுவதும் குழந்தைகளுக்குப் பயணம் செய்யும் போது இன்பத்தை அள்ளித் தருவதும் ஒரே நேரத்தில் பலர் அமர்ந்து பயணம் செய்து பயன் தருவதும் பேருந்து.

“இன்பப் பயணம் சென்றிடவும்
எல்லா ஊரும் பார்த்திடவும்
துன்பப் போதில் உதவிடவும்
துணையாம் துணையும் இதுவேயாம்”

என்ற இந்தப்பாடலின் ஆசரியர்.திரு.தண்டாயுதம் அதன் இயல்பைக் குழந்தைகளுக்கு மழலைத் தமிழில் எடுத்துக் கூறுவது போற்றுதலுக்கு உரியதாகும்.

பொதுவாக மக்களின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்து அனைவரையும் இசையாலும் பாடல்களாலும் தன்வயப்படுத்தி இன்று முதலிடம் வகிப்பது வானொலியாகும்.

தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான அறிவியல் அறிவு என்பது இயற்கைப் பொருள்களை அறிந்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது. அத்தகைய நிலையில் விதையின் அறிவியல் விந்தைகளையும் அதன் பல்வேறு வளர்ச்சியையும் பாடல்களின் மூலம் எடுத்துக் காட்டும் முறை குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

“விதையே பின்னர் முளையாகும்
முளையே பின்னர் செடியாகும்
செடியே பின்னர் அரும்பாகும்
அரும்பே பின்னர் மலராகும்
மலரே பின்னர் காயாகும்
காயே பின்னர் கனியாகும்”

நிலத்தில் ஊன்றப்படும் விதையானது அரும்பு மொட்டு, போது மலர், காய், கணி மீண்டும் விதையாகி சுழற்சி முறையில் மக்களுக்குப் பயன்படும் விதத்தைச் சாதாரண முறையில் குழந்தைகள் உள்ளத்தில் பதிய வைக்குமட கவிஞர்கள் தான் முதல் ஆசான்கள் எனலாம்.

வளரும் இளம் உள்ளங்களில் ஒரு குறிப்பிட்ட அறிவை மட்டும வளரச் செய்யாமல் சமுதாயத்தில் அன்றாடம் நடைபெறும் பல்துறை அறிவையும் கொடுத்து தெரியாத பொருள்களையும் தெரிய வைத்து எதிர்காலச் சிந்தனையாம் அறிவியல் வளர்ச்சியினையும் அதன் படைப்புகளையும் புலப்படுத்தி ஆர்வமுள்ள, ஆற்றல் பெற்ற குழந்தையாக வளர்ப்பது இன்றைய நாளின் தேவையாகும்.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.