குழந்தைப் பாடல்களில் இலக்கியக் கருத்துகள் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

குழந்தைப் பாடல்களில் இலக்கியக் கருத்துகள்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

“உடைப் பெருஞ் செல்வராயினும்

 மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

                                  பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” – புறம்.188

              பெருஞ்செல்வராக இருப்பினும் குழந்தைச் செல்வம் இல்லையெனில் அது ஒரு பெருங்குறையாகவே கருதப் பெற்றது. காரணம் குழந்தையை ஒரு செல்வமாக கருதுவது தமிழ்நாட்டின் பண்பாகும். ‘தம் மக்கள் தமது பொருள்கள்’ எனும் உயர்ந்த எண்ணம் இம்மண்ணில் வேரூன்றி நிலைத்துள்ளது. அத்தகைய குழந்தைகளைப் பிள்ளைப் பருவத்தில் மகிழ்விக்கவும், அறிவு புகட்டவும் பாடல்கள் சங்ககாலந்தொட்டே இருந்தியருக்க வேண்டும். ஆனால் பல்வேறு அறிவியல் மற்றும் ஊடகங்களின் வளர்ச்சியினால் இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு வகைகளிலும் செழித்து வளர்ந்து வருகிறது. ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே பாவேந்தர் குழந்தைகளுக்கான பாடல்களைப் புனைவதில் நாட்டம் கொண்டிருந்தார் என்பர்.

பாவேந்தர் கவிநயம்

இளம் பருவத்துக் குழந்தைகளுக்காகப் பாடப்படும் பாடல்கள் அக்குழந்தைகளின் பருவத்திற்கேற்ப சொற்கள் கொண்டனவாய், ஏற்ற பொருள் உடையனவாய் அமைதல் வேண்டும். இதன் மூலம் நாளடைவில் குழந்தைகள் புதிய புதி சொற்களைக் கற்று கொள்ள முடியும்.

“அகர முதலி என்று

               நாளும் பார்த்து வருவாய்

 நிகரிலாத சொற்கள்

                    நினைவில் நன்கு பெறுவாய்” 

               தாய்மொழியில் புதிய சொற்களை இனங்கண்டு கொண்டால் கற்பதற்கு எளிதாயிருக்கும். மேலும் சொல் வளம் கூடும். மொழிப் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்று குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்.

இன்றைய குழந்தைகளிடம் படி என்று கூறினால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனால் கல்வியின் பயன்பாடு எத்தகைய சிறப்பு பொருந்தியது என்பதனை பாவேந்தர் நயம்படக் கூறுகிறார்.

                 “கடிதாய் இருக்கும் இப்போது

  கல்வி கற்றிட கற்றிட

  தெரியும் அப்போது” 

             கல்வி என்பது ஏதோ நமக்கு கடினமானது போலத் தெரியும் ஆனால் படிக்க படிக்கத்தான் கல்வியின் அருமையும் சுவையும் நமக்குப் புரியும்.குழந்தைகளை நன்கு படிக்க அறிவுறுத்துகிறார்.

செல்வத்துள் செல்வம் என்பார் வள்ளுவர். படிப்பது என்பது விலை மதிப்பிலா செல்வமாகும். நாட்டில் கல்லாமையை இல்லாமையாக்கிவிட்டால் மாந்தரிடையே நிலவும் வேற்றுமை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் மறைந்து சமுதாயத்தில் சமத்துவம் நிலவிடும் என்பதை,

                     “நூலைப்படி – சங்க

                                     நூலைப்படி – முறைப்படி

               நூலைப்படி”

என்று தொடங்கும் பாடலின் மூலம் எடுத்து இயம்புகிறார்.

        சாதி; என்னும் தாழ்ந்தபடி

         நமக்கெல்லாம் தள்ளுபடி

  சேதி அப்படி தெரிந்தபடி

  தீமை வந்திடும் மறுடி” 

   படிக்க நினைக்கும் குழந்தைகள் பொய்யும் புரட்டும் நிறைந்த நூல்களை விடுத்து நல்ல கருத்துகளை வாரிவழங்கும் ஏற்றமிகு நூல்களைக் கற்க பாவேந்தர் விழைகிறார்.

வளரும் குழந்தைகளுக்கு உள்ளத்தைப் பண்படுத்த விழைந்த பாவேந்தர் தாய்மொழி அறிவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டத் தவறவில்லை. பேசுவதும் எழுதுவதும் தமிழிலேயே இருக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

                        “தனித்தமிழில் கலகலவென்று

       தட்டாமல் பேசு – பாப்பா

  தட்டாமல் பேசு தம்பீ

  தட்டாமல் பேசு”

                பேசுவதும் எழுதுவதும் தமிழில் அமைந்தால் குழந்தையின் உள்ளத்திற்கு ஏற்றமும் ஊட்டடும் உருவெடுக்கும் என்று நயம்பட உரைக்கிறார்.

பாவேந்தர் – ஆத்திசூடி

அவ்வையார் குழந்தைகளுக்கெனவே ஆத்திசூடி இயற்றினார். கொன்றை வேந்தன் என்ற நூலையும் தந்தார். அவரைப் பின்பற்றி பலர் பல்வேறு அறக்கருத்துகள் அடங்கிய நூல்களை இயற்றினர். பாரதியின் புதிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பாவேந்தரும் ‘ஆத்திசூடி’ பாடினார். பாவேந்தரின் ஆத்திசூடியில் அவர் விரும்பிய இலட்சிய உலகமும், குழந்தைகளின் எதிர்காலத்தின் ஒளிமயமும் நன்கு புலப்படுகிறது.

அய்ந்தொழில் செய்பவன் கடவுள் என்று சமயங்கள் இயம்பும். ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என்பன அவற்றைச் செய்பவன் நீயே என்று குழந்தைகளைப் பார்த்து கூறுகிறார்.

அய்ந்தொழிற் இறை நீ என்பது வாக்கு. குழந்தைகளிடம் புதியச் சிந்தனைகளை உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பைத் தருவதற்குப் பாவேந்தரின் பாட்டுத்தோட்டம் அடிப்படையாக அமைந்துள்ளது.

கல்வி என்பது இனிமையானது என்பதை முதலில் உணரவேண்டும். ‘கல்விகற்கண்டு’ என்கிறார். ‘கால்விலங்கு கல்லாமை’ கற்பவனுக்கு இந்த உலகம் விரிந்தது, பரந்துபட்டது. கல்லாதவன் கிணற்றுத் தவளைகளைப் போல உலகையும் முற்றும் அறிய வாய்ப்பில்லை. எனவே ‘இளமையில் கல்’ எப்பொழுதும் கல்வியில் ஊன்ற வேண்டும் என்று பாவேந்தர் குறிப்பிடுகிறார். ஆணுக்குப் பெண் அடிமை என்று உலக முழுதும் பரவியிருந்த நிலையை மாற்றிட எண்ணினார் பாவேந்தர். இந்த நிலை மாறாத வரையில் மாந்தரிடம் எந்த வகையிலும் வளர்ச்சி நிலையை நாம் எட்டமுடியாது. மேலும் அணும் பெண்ணும் ஒற்றுமையுடன் சரியாக எண்ணும் காலத்தில்தான் பிறக்கும் குழந்தைகளும் அறிவார்ந்த நிலையில் பிறக்கும்.

கைம்மை அகற்று’

               ‘பெண்ணோடு ஆண் நிகர்’

‘சிறார் நலந் தேடு’  

                எனவே தமிழ் சமுதாயம் தகத்தகாயமாய் ஒளிவிட வேற்றுமையகற்றி ஒன்றுபட்ட உன்னத நிலையை எய்திட சமத்துவம் உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பாவேந்தர் வலியுறுத்துகிறார்.

பாவேந்தர் கவிதைகளின் ஊற்றே தமிழ் உணர்வுமதான். தமிழைப் பற்றி பல்வெறு நோக்கங்களில் உயர்த்திப் பாடினாலும் பல இடங்களில் உயிர் என்றே சிறப்பித்துக் கூறுகின்றார். குழந்தைகளுக்கு மொழி உணர்வை வளர்ப்பது அவசியம் என்பதும் இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது. உயிர் போன்ற தமிழுணர்வை பாவேந்தர் குழந்தைப் பாடல்களில் ஆங்காங்கே அள்ளித் தெளித்துள்ளார்.

     ‘தமிழ் உன் தாய்மொழி’

‘முத்தமிழ் முக்கனி’ 

        ‘வெல்லத் தமிழ் பயில்’   

                என பல இடங்களில் தமிழ் உணர்வையும் தாய்மொழியின் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறார்.

‘இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்

           இனியிந்த நாட்டினை ஆளப்பிறந்தீர் – என’ 

                பாவேந்தர் இன்றைய குழந்தைகளின் எதிர் காலத்தில் இந்த நாட்டின் தலைவர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், கவிஞர்களாகவும் உருவாகி நாட்டின் நலனுக்கு ஆக்கந்தேடுவோர்களாக மாறவேண்டும், மாறுவார்கள் என்பதே குழந்தைக் கவிதைகளின் மையக் கருவா அமைந்துள்ளது இங்கு எண்ணத்தக்கதாகும்.

துணை நூல்கள் :

  1. டாக்டர்.த.பெரியாண்டவன், புரட்சிக் கவிஞரின் இளைஞர் இலக்கியம்;
  2. புலவர்.இரா.இளங்குமரன், பாவேந்தரும் குழந்தைகளும்;
  3. புத்தனேரி.ரா.சுப்ரமணியம், பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்.

—–

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.