குழந்தைப் பாடல்களில்  மொழிநடையும் இலக்கிய நயமும் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

குழந்தைப் பாடல்களில்  மொழிநடையும் இலக்கிய நயமும்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும்  தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

முன்னுரை

இலக்கியப் படைப்பின் தன்மையை அளப்பதற்குப் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றுள் மொழிநடையும் ஒன்றாகும். படைப்பாளியை அடையாளம் காண்பதற்கு அந்தப் படைப்பாளனின் மொழிநடை பெரிதும் காரணமாகின்றது.

உரைவகை நடையே நான்கென மொழிப

நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாக்கி

         எனத் தொல்காப்பியமும், பிற இலக்கண நூலாரும் நடை எனும் சொல்லாட்சியைப் பல்வேறு இடங்களில் கையாண்டு உள்ளனர்.

“ஒரு நல்ல ஆசிரியருடைய நாம் இனம் கண்டு கொள்ளலாம். அவர் படைப்பிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தால் இது என்ன ஆசிரிருடைய நடை என்று படித்தவுடன் தவறாமல் சொல்லிவிடலாம். இவ்வாறு படித்தவுடன் படைத்த ஆசிரியரை இனம் கண்டு கொள்வதற்கு அவருடைய நடையில் காணப்படும் தனித்தன்மை காரணம் ஆகும்”

தமிழ் இலக்கிய நடையில் காலந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் தேவையை முன்னிட்டு தமிழ் இலக்கிய நடையில் ஏற்பட்ட மாற்றங்களின் முதிர்ந்த நிலையை இன்றைய கவிதைகளில் காண முடிகிறது.

எனவே நடை குறித்த பல்வேறு கருத்துக்களேடு குழந்தைப் பாடல்களை ஒப்பிட்டு நோக்குவது இந்த இயலின் சிறப்பாகும். குழந்தைப் பாடல்களில் நடை மிகவும் எளிமையாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

மொழிநடை

நடையின் அடிப்படைப் பண்பாக விளங்குவன கவிஞர் தாம் கையாளும் சொற்களேயாகும். அவர்கள் எடுத்தாலும் சொற்கள் கவிஞர்களை இனங்காட்டுவனவாகவும், அவர்களது படைப்பின் தன்மைகளை எடுத்துக் காட்டுவனவாகவும் அமைகின்றன. அந்த வகையில் குழந்தைக் கவிஞர்கள் எடுத்தாண்டுள்ள சொற்களின் இயல்பினையும், அவர்களின் ஆழ்ந்த அறிவினையும் குழந்தைகளின் உணர்வினையும் இனங்காண முடியும். இந்தப் பகுதியில் குழந்தைக் கவிஞர்கள் பயன்படுத்தியுள்ள சொற்கள் பின்வருமாறு பகுத்து விளக்கப்படுகின்றன.

    1.பழகு தமிழ்ச் சொற்கள்

2.இலக்கியச் சொற்கள்

3.பிறமொழிச் சொற்கள்

                     என மூவகையாகப் பாகுபடுத்தி விளக்கலாம்.

பழகு தமிழ் சொற்கள்

குழந்தைகளுக்காக இயற்றப்படும் பாடல்களில் மிகவும் எளிமையான அறிமுகமான சொற்களைக் கொண்டு விளக்குவது இன்றியமையாததாகும்.

    “அடுப்பங்கரையில் பூனைக் குட்டி

        அயர்ந்து தூங்குவது பூனைக் குட்டி

     துடுப்பை எடுத்தால் பூனைக் குட்டி

        துள்ளிப் பாயும் பூனைக் குட்டி”

                 என்னும் பூனைக் குட்டிப் பாடலில் கவிஞர் வாணிதாசன் எளிய நடையில் பழகு தமிழை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்குக் கல்வியைப் பற்றிய கூறிய பாரதி கூடி விளையாடவும், ஓய்வினில் உழைக்கவும், கூடி வாழவும் பிற குழந்தைகளோடு அன்பு காட்டவும் பழக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

      “ஓடி விளையாடு பாப்பா – நீ

                       ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

    கூடி விளையாடு பாப்பா – ஒரு

                               குழந்தையை வையாதே பாப்பா”

               குழந்தை மொழியிலேயே அவர்களின் மனநிலையைக் கேற்ப ஒலி நயமும், பழகு தமிழ்ச் சொற்களும் கொண்டு கவிதை படைத்துள்ளார்.

      “பண்ணோடு பாட கூசாதே – உன்

        பள்ளியில் எவரையும் ஏசாதே

      மண், ஓடு, துணி, ஆணி கடிக்காதே – கேள்

                      மற்றவர் பொருளை நீ எடுக்காதே” 

                 பாவேந்தரின் தமிழ்ச் சிந்தனையில் உருவான ‘இளைஞர் இலக்கியம்’ எனும் நூலில் குழந்தைகள் மனதில் நற்கிந்தனைகளை  இனிய தமிழில் எடுத்துரைப்பது சிறப்பானதாகும்.

இலக்கியச் சொற்கள்

கவிதைக்கு அழகைச் சேர்ப்பது பைந்தமிழ்ச் சொற்கள். ஆதலால் இலக்கியச் சொற்களைக் கவிதைகளில் கூட்டும் போது குழந்கைகளின் சொல் அறிவும், மொழி அறிவும் அதிகரிக்கும்.

 “வில்லடித்த பஞ்சு

 விட்டெறிந்த தட்டு

 முல்லை மலர்க் குவியல்;

 முத்தொளியின் வட்டம்;

 நல் வயிரவில்லை;

 நானில விளக்கு”

                சந்திரனுக்கு நல்ல தமிழ்ச்சொல் நிலவு. அந்த நிலவில் அந்த நிலவின் அழகைப் பாவேந்தர் குழந்தைகளுக்கு இலக்கிய சொற்களைக் கொண்டு எடுத்துக்கூறும் விதம் சிறப்பிற்குரியது. கவிஞர் வாணிதாசன் தனது படைப்புகளில் ஏராளமான சொற்களைக் கையாண்டுள்ளார்.

“அகழி, முணறி, குணகடல், உய்யும்”

என்பன கவிஞர் பயன்படுத்தியிருக்கும் சொற்களாகும்.

இலக்கிய நயம்

கவிதை என்பது நுண் கலையாகும். கவிதையின் துணை கொண்டு சில அனுபவங்களை வெளியிடுகிறது. இது வாழ்வியல் உண்மைகளை கற்பிக்கின்றது என்பதைவிட உணரச் செய்கிறது என்றுதான் கூற வேண்டும்.

வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் குழந்தைகளின் உள்ளம் புறம்பான ஒன்றை நாடும் போது அவைகளைக் களையும் பொருட்டு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், அவர்களை நல்ல பாதைக்குத் திருப்பவும் இலக்கியங்கள் தயாராக இருக்க வேண்டும்.

குழந்தைகள் வளர வளர தாயின் சூழ்நிலையோடு பிறர் குழந்தைகளின் பழக்கவழக்கங்களும் பல்வேறு பொருள்களின் பார்வையும் அதன் கண்கணுக்குப்படுகின்றன. அன்று முதல் அதற்கு என்னு ஓர் உலகம் உருவாகின்றது.

இலக்கியம் குழந்தைகளுக்கு எதைத் தர முடியும்? என்று கேட்கக் கூடாது. குழந்தையின் இயற்கை, அதன் தேவை, சிந்தனை, செய்யும் கற்பனை, பிறர் மீது செலுத்தும் அன்பு உள்ளடக்கிய பல்வேறு கருத்துக்களை உருவாக்கித் தரலாம்.

கற்பனை

மனிதனுக்கு மட்டுமே சொந்தமான இக்கூறு அவனால் படைக்கப்படும் இலக்கியத்தின் பிழிவாக விளங்குகிறது.

“புலவன் நேராக ஒரு பொருளை நுகராத சமயத்திலும் அந்தப் பொருளை நினைவுக்குக் கொண்டு வந்து அப்பொருளிடத்து மீண்டும் நுகர்ச்சியை ஏற்றவல்ல ஆற்றலாக அமைவது கற்பனை” எனக் க.த.திருநாவுக்கரசு கூறுவார். அதேபோல குழந்தைகள் கற்பனை ஆற்றல் மிக்கவர்கள், தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கற்பனை உலகில் கழிப்பவர்கள். எனவே அவர்களுக்குப் படைக்கப்படும் இலக்கியங்களிலும் இத்தகு கூறுகள் இடம் பெறுவது அவசியமாகும்.

“முல்லை நறுமலரோ

 முருகவிழ்க்குங் தாமரையோ?

 மல்லிகைப் பூவோ?

 மருக்கொழுந்தோ ! சண்பகமோ?”

               கவிமணி பாடிய குழந்தைத் தாலாட்டுப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனை நேர்த்தியானது.

“சொக்க வெள்ளித்தட்டு – மிகத்

 தூய வெண்ணெய்ப்பிட்டு

 தெற்கத்தியார் சுட்டு – நல்ல

 தேங்காய்ப் பாலும் விட்டு”

                நாளைய தலைமுறைகளான குழந்தைகளின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்ந்த வேண்டும் என்ற கற்பனை எண்ணத்துடன் பாவேந்தர் நிலலைப் பார்த்துக் கவிதை படைக்கிறார்.

எதுகை

எதுகையும், மோனையும் யாப்பின் சிறப்பு மிக்க கூறுகளில் குறிப்பிடத்தக்கனவாகும்.    “மோனை, எதுகை, தளை முதலியன யாப்பின் பாற்பட்ட உத்திகள், சொற்களின் ஒளியாற்றலைச் சிறப்பாகக் சுட்டுவன என்பர் கைலாசபதி. எனவே குழந்தைப் பாடல்களுக்கு ஓசை நயமும் முக்கியமானதால் மோனை, எதுகை போன்ற கூறுகளுக்கு சிறப்பான இடம் உண்டு எனலாம்.

“குயிலே குயிலே கூவாயோ?

     குரலால் என்னைக் காவாயோ?

 பயிலும் உன்வாய் பூவாயோ?

    பயனை அள்ளிம் தூ வாயோ?”

எனும் இப்பாடலில் ஈற்று எதுகை வந்து குழந்தைகளுக்கு ஓசையின்பம் அளிக்கிறது.

“சின்னஞ்சிறு குட்டை – அதில்

          ஊறும் தென்னை மட்டை – அதோ

 கன்னம் கரிய அட்டை – எதி;ர்

 காயும் ஒரு முட்டை – அதோ”

                 பாவேந்தரின் குட்டையைப் பற்றிய இந்தப் பாடலிலும ஈற்றில் எதுகை தந்து ஓசையை அதிகரிக்கிறது.

இன்றைய இளைய சமுதாயம் உயர்நிலை அடைய வேண்டுமெனில் ஆயாயினும், பெண்ணாயினும் அறிவாந்நலை வளர்த்துக்கொண்டு உயர வேண்டுமென்பார் பாவேந்தர்.

 “பச்சை விளக்காகும் – உன்

 பகுத்தறிவு தம்பி

 பச்சை விளக்காலே – நல்ல

 பாதை பிடி தம்பி”

                குழந்தைக் கவிஞர்கள் இத்தகைய எதுகை, மோனைகளைப் பயன்படுத்தி இயற்றிய பாடல்கள் மிகவும் குறைவு எனலாம்.

—–

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.