தந்தை பெரியாரின் திறனாய்வு நெறிமுறைகள் ஒரு மதிப்பீடு – முனைவர் ப.கமலக்கண்ணன்

Print Friendly, PDF & Email

தந்தை பெரியாரின் திறனாய்வு நெறிமுறைகள் ஒரு மதிப்பீடு

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

மனித எண்ணங்களில் இலக்கிய வடிவம் பெற்றதால் இலக்கியம் முகிழ்த்தது. இலக்கியத்திற்கு இலக்கணம் இதுதான் என்று நேரிடையாக வரையறுத்துக் கூறுவது எளிதன்று. ஒருவரின் படைப்பைப் படித்துவிட்டு விமர்சனம் செய்யும் போதே அங்கு ஆய்வு மனப்பான்மை தோன்றி வருகிறது. அந்த வகையில் தமிழ் இலக்கியங்களைக் குறித்து தந்தை பெரியார் சில அடிப்படையான அளவுகோலை வைத்துக் கொண்டு தமது இயக்க வளர்ச்சிக்கு பிரச்சாராமாக பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதன் மையப் பொருள் எவையெவை என்பதைப் பற்றி ஆராய வேண்டியது இன்றைய இன்றியமையாதக் கடமையாகும்.

கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் போன்று திறனாய்வுக் கலையும் தமிழில் ஒரு துறையாகத்தான் மதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்றத் துறைகளைப் போல இலக்கியத் திறனாய்வு தனித்துறையாக வேகமாக வளர்ச்சிப் பெறாதது. நம்முடைய இலக்கியத்திற்கு ஒரு வெற்றிடமாகவே கருதப்படுகிறது. பெரும்பாலும் நாம் மூல நூலை மேலோட்டமாகப் படித்துச் சுவைக்கும் அளவுக்கு அதன் நிறை குறைகளை எடுத்துக்கூறி வெளிப்படுத்துவதில்லை. அதனால் தான் இன்றைய இலக்கியங்களில் தரமானவைகளை நம்மால் இனம் காண முடிவதில்லை.

ஓர் இலக்கியத்தில் அனைத்தையும் படிப்பதென்பது இன்றைய தொழில் நுட்பம் வளாந்து வரும் நிலையில் இயலாத காரியமாகும். அப்படியே படிக்க முற்பட்டாலும் ஒரு சில பகுதிகளைப் படிதது முடித்தவுடந் சலிப்பு ஏற்படலாம். எனவேதான் அந்த இலக்கியத்தின் கருத்துச் செறியுள்ள ஆய்வுப் பகுதிகளைக் கலந்துரையாடி வெளிக் கொணரும் போது அந்த இலக்கியத்தின் கருத்துகளும், சிறப்புகளும் வெளிப்படும். மேலும் படைப்பாளனின் உணர்வுகளைப் படித்து நுகர்வோனால் பெறவும் முடியும். இவ்வாறு திறனாய்வின் நோக்கமே இலக்கியத்தின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தி அதன் தரத்தையும் வாசகர்களையும் பெருக்குவதேற்கேயாகும்.

பெரியாரின் ஆய்வு மனப்பான்மை

அயல் நாடுகளில் காணப்படும் அறிவியல் தாக்கம் பெற்ற திறனாய்வு முறைகள் தமிழில் கிடையாது என்ற குறை இருந்தாலும் ஆங்காங்கே பல அமைப்புகள் இத்தகைய ஆய்வுப் பணிகளைச் செய்து வருவது பாராட்டத்தக்கது.

மேலை நாடுகளில் ஏற்பட்ட அரசியல், சமுதாயம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் இலக்கியங்களின் வடிவமும், உள்ளடக்கமும் மாற்றம் பெற்று காலப் போக்கில் அதன் ஆய்வுப் போக்கும் மாறிற்று. தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பே தந்தைப் பொயிhர் தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட பல்வேறு முரண்பாடுகளை எடுத்துக்கூறி, அவைகளைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி இலக்கியம், மொழி, சடங்கு, நம்பிக்கைகள் போன்ற பல்வேறு துறைகளையும் விமர்சித்து தனக்கே உடைய முறையில் கருத்துப் பிரச்சாரம் செய்து வந்தார். அவரது கருத்துக்கள் பெரும் பாலானவை எதிர்காலச் சிந்தனைகளுக்கு வழிகாட்டுவதாகவே அமைந்திருந்தன.

பெரியார் ஒரு பகுத்தறிவாளர். பகுத்தறிவு இயக்கவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது இயக்கம் சில கொள்கைகளின் அடிப்படையில் இயங்கிய ஒன்றாகும். பெரியார் அடிப்படை அணுகுமுறையில் ஒரு இலக்கியத் திறனாய்வாளர் அல்ல. எனினும் ஒரு மிகப் பெரிய சமுதாய சீர்திருத்தவாதி என்ற அடிப்படையில் அவருடைய அறிவுப்பூர்வமான அலசல்கள் இலக்கியத்தைக் குறிப்பாக தமிழ் இலக்கியத்தை மிகக் கூர்மையாக அறிந்தறிவித்திருக்கின்றன.

பெரியாரின் இலக்கியப் பார்வையானது வரையறைக்குள்ளான திறனாய்வு எல்வைக்கள் பொருள் பொதிந்து அமைந்துள்ளது என்பதில் அய்யமில்லை. இந்த அணுகுமுறையை நோக்கின் மனிதநேயம், ஒழுக்கம், பகுத்தறிவு, அறிவியல், சுயமரியாதை, பொதுவுடைமை சீர்திருத்தம் போன்ற இவரது சமுதாயக் கொள்கைகள் தமிழ் இலக்கியங்களில் ஊடுருவி எள்ளனவா என்பதையும் நாம் நன்கு அறிந்து கொள்ளமுடியும்.

தமிழகத்தில் அரசியல், சமுதாயம் ஆகியவற்றின் பணிகளில் அவரது சீர்திருத்த நோக்கம் எவ்வாறு அமைந்தன என்பதை நோக்கும் போது இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த அந்த நாட்டின் சமுதாயத்தின் இலக்கியம், பண்பாடு குறித்த அவரது பார்வையும் எதை எதிர்பார்த்தார். எதிர்த்தார் என்பதையும் நாம் மதிப்பீடு செய்ய முடியும்.

உலகில் பல்வேறு சமுதாய சீர்திருத்தவாதிகளான அரிஸ்டாட்டில், பிளேட்டோ, சாக்ரடீஸ், மார்க்ஸ், பெட்ராண்ட்ரஸல் போன்றோர் இலக்கியம் மற்றும் இலக்கியக் கோட்பாடுகள் குறித்துப் பார்த்தப் பார்வைக்கும், பெரியாரின் இலக்கியப் பார்வைக்கும் உள்ள வன்மை, மென்மைகளை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

பண்டையக் காலந்தொட்டு 19-ம் நூற்றாண்டு வரை உயர்ந்ததாகவும், மேன்மையாகவும், புனிதமானதாகவும் கருதப்பட்டு வந்த இராமாயணம்;, மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், பெரிய புராணம், கந்தபுராணம் போன்ற இலக்கியங்களும் பெரியாரின் விமர்சனப் போக்கில் தனது புனிதப்பாட்டுத்தன்மையை இழந்தன என்றாலும் மீண்டும் அந்த இலக்கியத்தை எப்படி நாம் உணர்ந்து கொள்வது என்ற வளர்ச்சி போக்குகளையும் இன்றைய திறனாய்வாளரிடம் நாம் காணமுடிகிறது. இதற்கு அடிப்படை இலக்குப் பெரியார் விதைத்த மாறுபட்ட சிந்தனையேயாகும்.

தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை மட்டுமல்ல மொழியையும் தந்தை பெரியார் விட்டு வைக்கவில்லையென்றே கூற வேண்டும். பெரியாரின் மொழி குறித்த சிந்தனை மிகவும் அவசியமானன ஒன்று என்றே நாம் கூற வேண்டும்.

‘தமிழ் மொழியிலுள்ள எழுத்துகள் நமது பெண்கள் போடுவதை விட மிகவும் கடிகமான வடிவங்களைக் கொண்டுள்ளன’. எனவே கடினமான வடிவங்களை அகற்றிவிட்டு மறு கட்டமைப்பு முறையில் எளிமையான வடிவங்களில் உருவாக்க வேண்டுமென்று அவரே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு புதிய புதிய வடிவங்களை உருவாக்கினார். இதன் மூலம் இந்த முயற்சி இன்று தமிழ் இலக்கியத் துறையில் பெரியார் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி என்றே நாம் கூற வேண்டும்.

பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுக்களையும், படைப்புகளையும் ஆய்வ நோக்கில் பார்த்தோமானால் காலம், மரபு வரலாறு ஆகிய சூழலுக்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களைப் பெரியார் திறனாய்வு நோக்கில் அணுகுவதால் அவரது மதிப்பீடுகள் எவ்வாறு இன்றைய நடைமுறைச் சிந்தனைக்கு ஒத்துப் போகுமென்பதையும் உணரலாம். இலக்கியத் திறனாய்வு உலகில் பல்வேறு அணுகுமுறைகள் தோன்றி நிரந்தரமாகியுள்ளன.

  • அ) இலக்கிய நோக்கினை அணுகுமுறை
  • ஆ) ஒழுக்க நெறியான அணுகுமுறை
  • இ) உளவியல்(அ) மனவியல் அடிப்படையிலான அணுகுமுறை
  • ஈ) அமைப்பியல் அணுகுமுறை
  • உ) மறு கட்டமைப்பு

என பல்வேறு வகையான திறனாய்வு அணுகுமுறைகள் இன்று உலக இலக்கிய திறனாய்வு வரலாற்றில் நிரந்தர அங்கங்களாக பரிணமிக்கின்றன. அதுபோல பெரியாரின் கருத்துகளையும் இலக்கியம் மொழிக் குறித்த அவரது ஆய்வுப் பணிகளையும் நாம் ஆய்வு செய்தோமானால் தமிழ் இலக்கிய உலகிற்கு பகுத்தறிவு என்ற புதிய பரிணாமத்தை நாம் உருவாக்க முடியும்.

எனவே பெரியாரின் கருத்துகள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் நிறைந்த பயன்பாடுகளைப் போல வருங்காலங்களில் இலக்கிய உலகிற்கும் மொழிக்கும் பல்வேறு வகையான சிந்தனைகளையும் புதிய புதிய ஆய்வுப் போக்குகளையும் ஏற்படுத்தும் என்பது உறுதியாகும்.

குறிப்புகள்

  1. நன்னன், மா.பெரியார் கணினி தொகுதிகள் 1,2,3, பூம்புகார் பதிப்பகம், சென்னை. 1996.
  2. நன்னன், மா.பெரியாரியல் – 2, மொழி, ஞாயிறு பதிப்பகம், சென்னை. 1993
  3. நன்னன் மா. பொரியாரியல் – 3, இலக்கியம், ஞாயிறு பதிப்பகம், சென்னை. 1993
  4. சுந்தரவடிவேலு, நெ.து.புரட்சியாளர் பெரியார், சென்னை. 1979.
  5. பொற்கோ, டாக்டர், பெரியாரின் மொழிக் கொள்கை, புலமை 1979.

———

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.