தந்தை பெரியார் பணிகளின் அடித்தளமும் நோக்கமும் – முனைவர் ப.கமலக்கண்ணன்

Print Friendly, PDF & Email

தந்தை பெரியார் பணிகளின் அடித்தளமும் நோக்கமும்

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

தமிழினத்தைப் பழைமைப் பிடியிலிருந்து புதுமைப் புல்வெளியில் அறிவொளியெனும் பூங்காற்றின் மூலம் நுகர்ந்து இன்பமுறச் செய்தவர். மனிதனுடைய பகுத்தறிவை அளவுகோலாகக் கொண்டு வாழ்வின் பல்வேறு இயல்புகளையும் நிலைகளையும் அமைப்புகளையும், சூழல்களையும் அலசி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியத் தூண்டியவர் பெரியார்.

நடுங்கும் வயதிலும், தளராதக் கொள்கை பிடிப்பு உள்ளவராய் சமுதாயத்தில் சிந்தனைப் புரட்சியையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்க அரும்பாடுபட்டவர்.

மனித நேயம்

பெரியார் பணிகளின் அடித்தளம் மனித நேயமாகும். மனித நலத்தையே முதன்மையாகக் கருதினர். மனித உரிமைகள் எந்ந வகையில் பாதித்தாலும் அதனைக் களைந்து எறிய வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர். மனித மாண்பையும், சமனியத்தையும் நிறுவுவதை இலக்காகக் கொண்ட உலகு தழுவிய அறிவியல் தன்மதிப்புக் கோட்பாடு தான் பெரியார் நமக்கு அளித்துச் சென்ற கொள்கையாகும்.

“எனக்கு வளர்ச்சியே முக்கியமாகும்.

                      எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது.

 எனக்கு வெறும் மனிதாபினம் தான்.

                   அதுவும் வளர்ச்சி அபிமானம் தான் முக்கியம்

 இந்த நிலையில் மற்றவர்கள் என்ன

                              கூறுவார்கள். நினைப்பார்கள் என்று நினைத்தால்

                                  உண்மையான மனிதாபிமானி ஆக வேண்டுமென்று

 கூறமாட்டேன்.”

என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

மனித நேயத்தை மறவாத இனப் பற்று, மனிதத்திற்கு மதிப்பிளிக்கும் சமத்துவம், சாதியற்ற சமுதாயத்திற்கு வழியமைக்கும் வகுப்பு வாரி உரிமை, மெய்மையை உள்ளடக்கிய பகுத்தறிவு என்று உலகத்தோடு ஒட்டிய தொலைநோக்குப் பார்வை உடையதாக இருக்கிறது.

        “ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிடச்

       சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள

              மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும்

 அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும்

             தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே

 பணியாய் இருப்பவன்.”           

                  மானுடம் தழுவிய அவருடைய இலக்கின் பொது வடிவத்தோடு அதன் தனி வடிவையும் இணைத்து தனது வாழ்நாள் பணிகள் இன்னதெனப் பெரியார் எழுதி வைத்தள்ளதாகவே தெரிகிறது.

அனைத்து மக்களும் வாழ வேண்டும், மனித வாழ்வு வளம் பெற வேண்டும். சிலர் உயர்ந்தவர் பலர் தாழ்ந்தவர் என்ற நிலை மாற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களுடன் ஒன்றியிருப்பது பெரியாரின் பணிகளாகும்.

பெரியாரின் பணிகள்

பெரியார் பகுத்தறிவு வாதியாக மட்டுமல்லாமல் தலைசிறந்த சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். சீர்திருத்தம் என்றால் என்ன? என்ற வினாவுக்குப் பெரியார் கூறும் பதில் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

“சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கத்தைக்

 கற்பிக்கவும், அறிவை விரிவுபடுத்தவும்

        உயிர்களிடத்து அன்பும், இரக்கமும் காட்டவும்

           சமத்துவத்தையும், சுயமரியாதை உணர்வையும்

          அதிகபடுத்தவுமே அமைய வேண்டும் என்கிறார்”

                சீர்திருத்தம் என்பது தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளுதலாகும். எந்த நிலையிலும் எப்போதும் எதிலும் மயங்கிடவோ விருப்பம் கொள்ளவோ, இயக்க வளர்ச்சிக்கு கேடு உண்டாக்கவோ அவரது வாழ்க்கை அமையவில்லை.

மேலும் கல்வி என்பதற்கு குறித்து பெரியார் மிகுந்த கவனத்துடன் பல்வேறு பயனள்ள கருத்துகளை வழங்கிருக்கிறார்.

  1. கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் ஏற்பட வேண்டும்.
  2. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் உணவு, உடை, உறைவிடம் எப்படி இன்றியமையாததோ அதேபோல் கல்வி என்பதும் இன்றியமையாதது.

நமது கல்விமுறை மாற வேண்டும். படிக்கும் போதே எடன் தொழிலும் பயில வேண்டும் எந்த வகுப்பில் படிப்பை நிறுத்தினாலும் அவர்கள் தொழில் செய்து பிழைக்கக் கூடியவராக இருக்க வேண்டுமென்று பெரியார் தொலைநோக்குச் சிந்தனை உடையவராக விளங்கினார்.

பெரியாரின் பணிகளில் கல்வியும், வேலை வாய்ப்பும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

             “பொதுமக்களின் தேவைக்கும் சவுகரியத்துக்கும்

 நன்மைக்கும் அவசியமென்று கருதப்படும்

 உற்பத்தி செய்யப்படும் பொருட்களின்

 தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள்

                      போக்குவரத்துச் சாதனங்கள் அரசாங்கத்தாலேயே

 நடைபெற வேண்டும்”

              வேலை வாய்ப்பிலும், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது என்று கருதினர்.

நாஞ்சிலும் இராட்டையும் நாட்டின் ஈரல்களாகக் கருதப்பட்ட அந்தக் காலங் கட்டங்களிலேயே கைத் தொழில் பயித்தியத்தை விட்டொழித்து இயந்திரத் தொழில் முறையைக் கையாண்டு அனைவரையும் வாழ்விக்க வேண்டும் என்று துணிந்து கூறியவர் பெரியார். மனிதனின் அறிவு வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து பெரியார் கூறம்போது,

“மனித அறிவின் சுபாவ அனுபவத்தையும்

     ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள்

                    சுருக்க வழியைக் கண்டுபிடிப்பது இயற்கையாகும்

    சாரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள

 ஆசைப்படுவது இயற்கையேயாகும்”

            தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயந்திரங்கள் வேண்டாமென்பது இயற்கையோடும், முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவனமான பிற்போக்கான இயற்கையோடும், முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவனமான, பிற்போக்கான வேலையென்று பெரியார் எடுத்துக் காட்டினர்.

மேற்கண்ட சீர்திருத்தப் பணிகளுக்கெலாம் அடிப்படையாக விளங்கி வருவது மனித நேயப் பண்பாகத் தெரிகிறது. பெரியார் கடவுள் மறுப்பாளர் என்ற எண்ணமுடையோருக்கு அவரின் சமுதாயப் பணிகள் குறித்த விளக்கமாக இந்தக் கட்டுரை அமையும். பெரியார் பிறரையும் பிறர் கருத்துகளையும் எவ்வாறு மதிப்பார் என்பதற்கு அவர்கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கடவுள் வாழ்த்துப் பாடப்படும் போது எழுந்து நிற்க தவறாதவர் என்றும் பொது நன்மைக்கு யார் தடையாக இருந்தாலும் உடனே விமர்சித்து அந்த நன்மையை பெற்றுத் தரும் ஆற்றல் உடையவர் பெரியார். இவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பு, அறிவியல் சார்பு என பல்வேறு துறைகளிலும் தனது அறிவின் மூலம் ஆராய்ந்து மக்களின் விழிப்புணர்வுக்கு வித்திட்டவாராக நாம் பெரியாரைக் காணலாம்.

குறிப்புகள்

  1. பெரியார், மொழியும் அறிவும்.
  2. வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி – 3
  3. பெரியார் புரட்சி மொழிகள் தொகுப்பு
  4. ஏ.எஸ்.வேணு, பெரியார் ஒரு சரித்திரம்
  5. க.த.திருநாவுக்கரசு, சான்றோர் கண்ட திருவள்ளுவர்.

———

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.