திராவிட இயக்கக் கவிஞர்களின் பார்வையில் குழந்தைப் பாடல்கள் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

திராவிட இயக்கக் கவிஞர்களின் பார்வையில்

குழந்தைப் பாடல்கள்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

குழந்தைகளை ஒரு செல்வமாகக் கருதுவது தமிழ்நாட்டின் பண்பு. தம் மக்களே தமது பொருள் என்ற உயரிய எண்ணம் இந்த மண்ணில் ஆழப் பதிந்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு அறிவையும், துணிவையும் அழகிய பண்புகளையும் இளமையில் எளிதாகக் கற்றுத் தருவது குழந்தை இலக்கியமேயாகும். குழந்தைப் பாடல்களுக்கென்று சில பொதவான பண்புகள் உண்டு. இப்பாடல்களுக்கு ஆழ்ந்த கருத்துகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஓரிரு கருத்துகள் மட்டுமே அமைந்த எளிய சிறு பாடல்களே குழந்தைகளுக்குப் போதுமானவை.

குழந்தைகளுக்கான புதிய உலகத்தைப் படைக்கவும், சமுதாயச் சிந்தனைகளை இளைய உள்ளங்களில் பதிய வைக்கவும், நாட்டுப் பற்று, மொழிப்பற்று போன்ற பல்வேறு உள்ளடக்கங்களைப் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தத் திராவிட இயக்கக் கவிஞர்கள் முனைந்தனர்.

தந்தை பெரியாரின் அறிவு, பெண்ணுரிமை கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு நில்லாமல் குழந்தைகளுக்கான கவிதைகளைப் படைக்கவும் முனைந்தனர் அதில் முழுமையான வெற்றியும் பெற்றனர். மனிதனுக்கு முழுமை தருவது கல்வியாகும். படித்து அவன் வாழ்வில் படிப்படியாய் உயர்வதே அடித்தளம். எனவே தான் பாவேந்தர் குழந்தைகளைப் பார்த்துப் படி, படி என்று கூறுகிறார்.

வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் உள்ளத்தைப் பண்படுத்த விழைந்த பாவேந்தர் தாய்மொழி அறிவு அவசியம் என்பதை எடுத்துக் காட்டத் தவறவில்லை. பேசுவதும் எழுதுவதும் தமிழிலேயே இருக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

தனித் தமிழில் கலகலவென்று

தட்டாமல் பேசு – பாப்பா

தட்டாமல் பேசு தம்பீ

தட்டாமல் பேசு

             இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் தமிழில் அமைந்தால் குழந்தையின் உள்ளத்திற்கு ஏற்றமும் ஊட்டமும் உருவெடுக்கும் என்று நயம்பட உரைக்கிறார்.

பாவேந்தர் கவிதைகளின் ஊற்றே தமிழ் உணர்வுதான் தமிழ் குறித்து பல்வேறு கோணங்களில் உயர்த்திப் பாடினாலும் பல இடங்களில் உயிர் என்றே சிறப்பித்துக் கூறுகின்றார். குழந்தைகளுக்கு மொழி உணர்வை வளர்ப்பது அவசியம் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது உயிர் போன்ற தமிழுணர்வைப் பாவேந்தர் குழந்தைப் பாடல்களில் ஆங்காங்கே அள்ளித் தெளித்ததுள்ளார்.

தமிழ் உன் தாய்மொழி

முத்தமிழ் முக்கனி

வெல்லத் தமிழ் பயில் 

                 என பல இடங்களில் தமிழ் உணர்வையும் தாய்மொழியில் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறார்.

 இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்

 இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர் 

               எனப் பாவேந்தர் இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தில் இந்நாட்டின் தலைவர்களையும் அறிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் கவிஞர்களையும் உருவாகி நாட்டின் நலனுக்கு ஆக்கந் தேடுபவர்களாக மாற வேண்டும். மாறுவார்கள் என்பதே பாவேந்தரின் கவிதைகளின் மையக் கருவாக அமைந்துள்ளது.

 நூலைப் படி – சங்கத் தமிழ்

 நூலைப் படி – முறைப் படி

நூலைப் படி

        காலையில் படி, கடும் பகல் படி

        மாலை இரவு பொருள்படும் படி

 நூலைப்படி 

       இவ்வாறு நல்ல நூல்களை முறையாகப் படித்து மேன்மேலும் முன்னேற வழிகாட்டுகிறார்.

பாட்டும் கதையும் குழந்தைகளுக்குப் பேரின்பம் ஊட்டுவன பிஞ்சு உள்ளங்களில் இனிய எளிய முறையில் நல்லறிவைச் சேர்க்கும் முயற்சியே குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள் என்பார் வாணிதாசன்.

 பெற்ற அன்னை தந்தையே – என்றும்

 பேசும் செல்வம் ஆகுமே

 மற்ற செல்வம் யாவுமே – நாட்டில்

 வந்து வந்து போகுமே! 

                 என்றைக்கும் நிலைத்த செல்வம் அன்னையும் பிதாவும் தான் என்று குழவிகளுக்குக் கோடிட்டுக் காட்டுகிறார் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இந்த மூன்றின் முன்னேற்றமே, நம் வாழ்வின் முன்னேற்றம் என்று கருதுபவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

 தமிழே எனக்கிங் குயிர் மலர்ச்சி – செந்

 தமிழே எனக்கிங் குடலம்

 தமிழே எனக்கிங் குள்ளுணர்வு – பைந்

 தமிழே எனக்கிங் குலகம். 

             என்று கொள்கை முழுக்கமாக முழுங்கி குழந்தைகள் உள்ளத்தில் மொழிப் பற்றை ஊற்றெடுக்கச் செய்கிறார்.

பொதுவாகக் குழந்தைகள் விளையாட்டில் விருப்பம் உடையவர்கள்.

 குதித்தாடம்மா குதித்தாடு

 குட்டி மான் போல் குதித்தாடு

 சிரித்தாடம்மா சிரித்தாடு

 சின்ன மயிலே சிரித்தாடு – எனக் 

              குழந்தைகள் விளையாடும் போது அந்தக் குழந்தைகள் பாடக் கூடியதாகவும், விளையாட்டை விளக்கக் கூடியதாகவும் பாடல்கள் அமையும்.

 வெண்தாடி வேந்தரடி – தமிழர்

 கொண்டாடும் சாந்தரடி 

                என்று தந்தை பெரியரை இசைப் பாடலில் நாரா.நாச்சியப்பன் பாடியுளள்ளார். அனைத்து மக்களின் வாழ்வும் மேம்பட வேண்டும் என்ற கருத்துடையவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

 ஏழைகள் புது உலகம் தெரியுதடா – நாம்

 ஏமாந்து வந்த நிலை ஓமியு தடா. 

                நமது சமுதாயம் நல்ல மாற்றமும் ஏற்றமும் என்றாவது ஒருநாள் பெறும் என்னும் நம்பிக்கையூட்டுகிறார்.

 தமிழ்மணம் எங்கெங்கும்

 வீசச் செய்வோம்

 தலைநிமிர்ந்து தோளுயர்த்தி

 உளங்களித்துத்

 தமிழ் வளர்க்கத் தமிழ் காக்க

 வாரீர்!! வாரீர்! 

                 தமிழ் மொழி வளர்க்க தலைநிமிர்ந்து, தோளுயர்த்தி உளங்களித்து தமிழ் காக்க அழைப்பு விடுக்கிறார் கவிஞர் பொற்கோ.

மு.வ. இயற்றிய பாடல்களில் ‘என்னை வளர்த்த அன்னை’ என்ற பாடலும் ஒன்று. ஆறு வயது சிறுவன் தான் பிறந்த சமயம் நட்டு வைக்கப் பெற்ற தென்னை மரம் இப்போது நன்றாக வளாந்து பலன் தருவதைப் பார்த்துப் பாடுவதாக அமைந்துள்ளது.

 உனக்கும் வயது ஆறே

 எனக்கும் வயது ஆறே

 நீ வளர்ந்த உயரம்

 நான் வளரவில்லை

 நீ கொடுப்பாய் இனநீர்

 நான் கொடுப்பதென்ன?

                  தான் எதுவும் தராமுடியாவிட்டாலும் இன்முகம் காட்டித் தன்னை அன்புடன் வளர்க்கும் அன்னையின் சிறப்பைத் தென்மையின் சிறப்புடன் சேர்த்துப் பாடுகிறான் சிறுவன்.

பெரியவர்களுக்காக உயிர்த்துடிப்புள்ள பல கவிதைகளைப் பாடி புகழ் பெற்றவரான தமிழ் ஒளி காவிரிப் பாட்டு மூலம் சிறுவர் இலக்கியத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளார்.

 கன்னித் தமிழ் வாழ வந்த காவிரி

 கடலில் வந்து வீழ வந்த காவிரி

 பொன்னி என்று பெயர் படைத்த காவிரி

 போய்ப் பறித்த மலர்கள் எங்கே கைவிரி 

                  குதித்தோடி வருகின்ற காவிரி பல பொருள்களைக் கொண்டு வரும், பல மலர்களைக் கொண்டு வரும் என்று குழந்தை எதிர்பார்க்கிறது. இறுதியில் ‘காவிரி’ ‘கைவிரி’ என்று நயமாகப் பாடிக் குழந்தைக்க நல்லின்பம் ஊட்டுகிறார் கவிஞர் தமிழ் ஒளி.

எந்த ஒரு கவிஞனுக்கும் தான் பிறந்த நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்று இருப்பது இயற்கை. ஆனால் அளவு என்பது அந்தக் கவிஞனின் மன நிலையைப் பொறுத்தது. மொழிப் பற்று என்பது கவிஞர்.மு.வைத்தியலிங்கம் அவர்களிடம் அளவிடற்கரிய நிலையில் உள்ளது.

 சிலப்பதிகாரம் குண்டலகேசி

 சிந்தாமணியொடு வளையாபதி;

 பலப் பல கூறும் மேகலையும் – போன்ற 

               காப்பிய விதிகளையும், யாமறிந்த புலவரிலே கம்பனை முதலில் வைத்துப் பெருமைப்படும் பாரதியை விடவும்

 வள்ளுவன் இளங்கோ சீத்தலைச் சாத்தன்

 வளர் தமிழ் கண்ட பழம் புலவர் 

     என்று கவிஞர் மு.வைத்தியலிங்கம் கூறுவது தமிழறிந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

குழலினும் யாழினும் இனியது மழரைகளின் சொற்கள் என்பது வள்ளுவரின் வாய்மொழியாகும். நமது இலக்கியம் பழமை வாய்ந்ததது, பாரம்பரியப் பெருமை பெற்றது என்றெல்லாம் நாம் உயர்வாக மதித்தாலும் இன்றையக் குழந்தைகள் பண்பட்டவர்களாகவும், செம்மையானவர்களாகவும் உருவாக சமுதாயத்தின் பல்வேறு நிறைகுறைகளையும் அவ்வப்போது திராவிட இயக்கக் கவிஞர்களின் தங்களது படைப்புகளில் கருவாக வைத்து உருவாக்கி வரும் எண்ணங்கள் பாராட்டத்தக்கதாகும்.

துணை நூல்கள் :

  1. பி.வி.கிரி – பாப்பா பாட்டு பாடிய பாவலர்கள்;
  2. மு.வை – மழலைப் பாட்டு, தேன்தமிழ் பதிப்பகம்
  3. அழ.வள்ளியப்பா – வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்;
  4. கு.வணங்காமுடி – பகுத்தறிவு இலக்கிய வரலாறு
  5. இரா.சுப்பிரமணியம், பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்

—–

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.