திருக்குறளில் புலப்படும் மானுட வாழ்வியல் – முனைவர் ப.கமலக்கண்ணன்

Print Friendly, PDF & Email

திருக்குறளில் புலப்படும் மானுட வாழ்வியல்

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

                 திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாய் நின்று நன்னெறி புகட்டும் அருமறையாகும். வள்ளுவர் கூறும் நெறிகள் வேற்றுச் சமயத்தவரும் ஏற்றுப் போற்றி வருகின்ற காரணத்தால் அந்தந்தச் சமயத்தவரும் திருக்குறளைத் தத்தம், சமயம், இனம் சார்ந்த நூலெனக் கூறிக்கொள்கின்றனர். இத்தகைய மக்கள் இலக்கியமாம் திருக்குறளைப் பிற்காலத்து உரையாசிரியர் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இடைச் சேர்க்கைக்கு உட்படுத்தியும், பிழையான கருத்துகளை உரையில் புகுத்தியும் அதன் உண்மைத் தன்மையை உணர முடியாமல் தடுத்து விட்டனர்.

திருக்குறள் பாயிரத்தில் முதல் மூன்று அதிகாரங்களில் காணப்படும் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை என்பவை வள்ளுவரால் இயற்றப்பட்டவை இல்லையென்றும், பிற்பாலத்தில் சேர்க்கப்பட்டவையென்றும் அதன் சொல், பொருள், செறிவு மற்றும் முரண் முதலியவற்றின் மூலம் இதை மெய்ப்பிக்க முடியுமென்று வ.உ.சிதம்பரம் அவர்கள் கூறுவதன் மூலம் உணரலாம்.

புத்துரையின் எழுச்சி

உலகத்தின் மூலம் எது என்பதைப் பற்றிய வள்ளுவரின் சிந்தனை மிகவும் போற்றற்குரியது. ஆனால் குறளுக்கு உரை எழுதியவர்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயம் சாதி, மதம் என்ற தற்சார்பு எண்ணங்களுடன் எழுதியதால் அதன் உண்மை நுணுக்கம் மறைக்கப்பட்டாலும் வள்ளுவரின் வாய்மொழித் தன்மை எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகிறது.

மொழிக்கு ‘அகரம்’ முதலாகி நிற்பது போல ஆதியாகிய பகலவன் (பகவன்) என இடைக் குறை முதலாக இருக்கிறது என்று புலவர் மு.வைத்திலிங்கம் கூற்றின் மூலம் வள்ளுவரின் மனநிலை நமக்கு தெளிவாகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.  குறள் .1

                தமிழ் நெடுங்கணத்தின் அனைத்து எழுத்துகளும் அகரத்தை முதலாக உடையன. அதுபோல இந்த உலகத்திற்குப் பகலவன் முதலாக உள்ளான் என்பதை இதன் கருத்து. எனவே மூட கருத்துகளுக்குக் கடுகளவும் இடம் கொடாதவாறு பயன் மிக்க கொள்கைகள் நமது பண்பாட்டுக் கூறுகளோடு எடுத்தோதிப் பகுத்தறிவுக் கருத்துகளை நம்மோடு பகரிந்து கொள்வதில் இந்திய இலக்கியங்களில் குறளுக்கு இணையாக வேறு நூல் இல்லையென்றே கூறலாம்.

ஒருவன் பெருஞ் செல்வம் உடையானாயினும் கல்வி கற்காத களர் நிலமாக இருப்பின் இந்தச் சமுதாயத்தில் பெருமைக் குரியவனாகக் கருதப்படமாட்டான். இழி குலத்தில் பிறந்த ஒருவன் நன்கு கற்றவனாக யிருப்பானாயின் கல்லாதவன் இவனுக்க ஈடாக மாட்டார் என்பது இதன் கருத்து.

                      மேற்பிறந்ததார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்து அலர் பாடு. குறள் .409

                ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மதவாதிகளால் நால் வருண பாகுபாடானது உருவாக்கப்பட்டு இலக்கிய, இலக்கண, வரலாறுகளில் புகுத்தப்பட்டு இன்று உலக பெருவழக்காகி விட்டது. மேலும் பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக நமது திருக்குறள் விளங்குதை நினைத்து நமக்குப் பெருமையா யிருக்கிறது. தமிழரின் இத்தகைய உயர்ந்த பண்பாட்டுக் கூறுகளை எண்ணும் போது உலகப் பொதுமையை எடுத்தோதுவதில் நமது இலக்கியங்களைப் போல வேற்றுமொழி இலக்கியங்கள் இல்லையென்றும் நாம் துணிந்து கூறலாம்.

சாதி, செல்வம், தகுதி முதலியவற்றால் மேலான பிறப்புடையவர்களும் கல்வி அறிவில்லாத வறான இருந்தாலும் சாதி, செல்வம் முதலியவற்றால் கீழான பிறப்புடையவரோடு ஒன்றாக வைத்து எண்ணக் கூடியவர்களல்லர். காரணம் அழியும் செல்வங்களைக் காட்டிலும் அழியாத் தன்மையுடைய கல்விச் செல்வம் சிறப்புடையது.

அறிவுக் இறைக் கோட்பாடுகளும்

இந்தச் சமுதாயமானது பன்மலர்கள் பூத்துச் சிதறிக் கிடக்கும் மலர் வனம் போன்றது. இதில் நல்லோரும் உண்டு, தீயோரும் உண்டு. நன்மை பயக்கும் உள்ளங்களும், நன்றி மறவாத நல்ல நெஞ்சங்களும் உண்டு. எனவே கற்றவர்களும், ஒழுக்கமுடையவர்களும் தான் கற்ற நூலின் பொருளை அறிந்து அவற்றில் குவிந்துள்ள அறிவு தொடர்பு பற்றி விவரித்துக் கூறுவதை ஒருவன் தனது செவியால் கேட்டு மனதால் நன்கு உணாந்து நடப்பதைக் கேள்வி அறிவு என்கிறோம். அத்தகைய கேள்வி அறிவானது மேன்மேலும் பெருகி வளரக் கூடிய அறிவு வளாச்சிக்கு அடிப்படையாகும். எனவே யார் கூறுவதாகக் கேட்டாலும் அதன் உட்பொருளின் மென்மை, வன்மை மற்றும் உண்மை, பொய்மை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து உண்மையை உணர வேண்டும்.

                  எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் .423

                 எந்தப் பொருளைப் பற்றியும் யார்? யார்? எப்படியெல்லாம் கூறினாலும் அனைத்தையும் அறிந்து அதில் எது மெய்ம்மை என்று நமது பகுத்தறிவால் உணாந்து கொள்ள வேண்டும்.

தொழுதல் என்பது கடவுளை வணங்குவது என்ற குறுகிய பொருளைக் கொண்டதன்று. தான் உயர்வாக எண்ணுபவரை வணங்கவது, ஒருவர் மற்றொருசரின் செயல் தறினைக் கண்டு போற்றும் பொழுது தொழுவது என்பனவற்றைக் குறிக்கும்.

                   கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்

நற்றார் தொழா அர் எனின். குறள் .2

                குற்றமற்ற அறிவுடையவனது நல்ல முயற்சியைத் தொழுவது போற்றாதவர் நல்ல நூல்களை நிறையக் கற்றும் அதனால் பயன் ஏதும் இல்லாதவரேயாவர்.

இறைவன் என்ற பிரச்சனைக்குரிய சொல்லானது                             முதல் அதிகாரத்தில் இரண்டு குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல் சங்க இலக்கியங்களில் தலைவன், அரசு, அரசன் வரி, போன்றப் பொருள்களில் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர கடவுள் என்ற பொருளில் அல்ல.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு. குறள் .5

                   மற்றவர்கள் புகழும்படி வாழ்ந்த தலைவனின் பொருளைப் போன்ற பொருந்தியப் பெருமையைப் பெற்றவர்களிடம் அறியாமையால் பெறுகின்ற பெரிய செயல்கள் வந்தடையும் மேலும் அவர்களைத் துன்புறுத்தாதென்று தெளிவா விளக்கும் வள்ளுவர் தமது நூலில் இறை, இறைவன் என்ற சொற்களை தலைமை, அரசன், தலைவன் என்ற பொருளில்  பயன்படுத்தியுள்ளார்.

எனவே இறைவன் என்ற சொல்லைக் கடவுளாக்கி மகிழ்வதை விடுத்து உண்மைப் பொருள் கொண்டு ஆராய்ந்தால் உரியப் பொருளை உய்த்துணரலாம். மொழியிலுள்ள உயர்ந்த சொற்களையெல்லாம் பயன்படுத்திய வள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை அப்படியே இறைவன் தெய்வதம் என்ற சொற்களுக்குக் கடவுள் என்று பொருள் கொண்டாலும் அதற்கும் வள்ளுவத்திவ் எதிர் கருத்து இருக்கத்தான் செய்கிறது.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டி பரந்து

கெடுக உலக இயற்றியான்.  குறள் .1062

                ஒருவன் மற்றவனை இரந்து பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை வருமாயின் இந்த உலகம் மட்டுமல்ல அதற்கெல்லாம் அடிப்படையாகக் கருதப்படும் கடவுள்தான் முதலில் அழிக்கப்பட வேண்டியவனாவான் என்ற வள்ளுவரின் கூற்று சிந்திக்கத் தக்கது.

அறிவும் ஒருமைப்பாடும்

திருவள்ளுவரும், புத்தரும் அறிவு முதல்வாதிகள் என்பர். திருக்குறள் ஓர் அறிவு நூல் என்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

            அறிவுடையார் எல்லாம் உடையார் (குறள் 4300)

அறிவுடையார் ஆவது அறிவார் (குறள் 427)

                   போன்ற தொடர்கள் அறிவு ஆராய்ச்சியின் சிறப்பை இயம்புகின்றன. அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்பு இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்தாக்கங்களைக் கொண்டு இயங்குவது வள்ளுவரின் வாய்மொழியாகும்.

தமிழருக்கு மதம் என்பது இருந்ததாக ஆதாரம் கிடையாது. இன்றை வழக்கில் மதம் என்பது பெருவழக்காய் ஒரே ஒரு கருத்தில் தான் குறிப்பாக கடவுளை அடையும் வழி என்ற பொருளில் தான் பயன்படுகிறது.

மதம் என்ற சொல்லுக்கும் தமிழர், தமிழுக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. சாதி, மதம், இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு பொது இலக்கியமாக திருக்கறளைப் படைத்தவர் வள்ளுவர்.

                      குடி செய்வார்க்கில்லை பருவம் மடி செய்து

மானங் கருதப் படும் .குறள்.1028

                ஒருவன் மக்களுக்கு நன்மைகள் பலவற்றை செய்ய வேண்டும் நினைத்தால் அதற்கு காலம், சகுனம், பார்ப்பது தவறு. மானம், மரியாதை. கற்பனை மூட்டத்தில் முழுமையாகத் தனதுச் சிந்தனைகளை மழுங்கடிக்காமல் சமுதாய விழிப்புணர்வு கருத்துகளை வழங்கிய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வள்ளுவர். இவரது பார்வை முழுமையான மானுட வாழ்வியல் பார்வையாக பதிந்துள்ளது.

இவ்வாறு கற்பனை மூட்டங்களில் முழுமையான சிந்தனைகளை மழுங்கடிக்காமல் சமுதாயம் விழிப்புப் பெறவும், மக்களிடையே மறுமலர்ச்சிக்கான விழிப்புணர்வு கருத்தக்களை வழங்கிய சிந்தனைகளில் வள்ளுவரும் குறிப்பிடத்தக்கது. வள்ளுவரின் பார்வை முழுமையான மானுட வாழ்வியல் பார்வையாகவே தடம் பதிந்துள்ளது.

எதையும் ஆராய்ந்து பாராமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அப்படிக் கூறப்பட்டவைகளின் அவசியத்தை அறிந்து அது இன்றைய சமுதாயத்திற்குப் பயன்படுமா? என்றும் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும் மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்த போது அவர்களிடம் பரப்பப்பட்டு வந்த மதச் சடங்குகளும் மூடப்பழக்கங்களையும் சீர்திருத்த விதைந்தார் பெரியார். அதன் தொடர்ச்சியாக மொழி, இலக்கியங்களிலும் மறைந்தும், மறையாமலும் வழங்கிவந்த கருத்துகளையும் களைந்து புதிய புதிய சிந்தனைகளுக்கு வழி கோலினார்.

இலக்கியம் என்பது மனித எண்ணங்களில் முகிழ்ப்பது என்பர் ஆனால் இலக்கியத்தில் எண்ணங்கள் மட்டும் வெளிப்பட்டால் போதாது, மனிதனின் வளாச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று பெரியார் கருதினார். இலக்கியம் என்பது மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். ஒழுக்கம், அறிவு போன்ற உயரிய குணங்களைக் கொண்டாதாக இருக்க வேண்டும் பயனற்ற எவற்றையும் பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலக இலக்கியங்களில் நீதி வழங்கியதில் சிறந்த நூல் திருக்குறள் ஒன்றுதான் என்று பெரியார் தமது கருத்தாக வெளிப்படுத்தி இருக்கிறார். பகுத்தறிவு இயக்கவாதியான பெரியாருக்கு திருக்குறளிடத்து ஈடுபாடு உண்டானமைக்குரிய பல்வேறு காரணங்களுள் முக்கியமானது ‘நான் திருக்குறளைப் படித்து ஏதோ சிறிது ஆராய்ச்சி செய்து எடுத்துச் சொல்லி வருவதன் உண்மையான கருத்து அவற்றில் பல எனது தொண்டுக்கு அரண் செய்வது போலவும் எனது கருத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் இருக்கிறது என்பதுதான் என்று அவரே தெரிவித்துள்ளார். நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயாந்த நெறிகளையும் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ளும் முறையையும் வழி வகுக்கக் குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறு கிடையாது என்பது பெரியாரின் கருத்து.

திருவள்ளுவரின் கருத்துகளில் பெரியார் அவர்கட்கு மிகுதியும் உடன்பாடு இல்லையாயினும் திருக்குறளை அவர் எதிர்க்க வில்லை காரணம் திருக்குறள் ஓர் அறிவு நூல் என்பதே யாகுமென்று குன்றக்குடி அடிகளார் கூறியதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப  இயைந்திருக்கக் கூடியனவும் மான கருத்துகளைக் கொண்டு திருக்குறள் இயங்குகிறது. திருக்குறள் ஒன்றே போதும் தமிழ் மக்களுக்கு அறிவைப்புகட்ட. திருக்குறளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிலுள்ள அனைத்து தலைப்புகளின் கீழ் வருவனவற்றை இரண்டு மூன்று பிரிவுகளாகப் பிரித்து எளிதில் பொருள் விளங்குவனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புகளுக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு விளங்கும் பகுதிகளை மேல் வகுப்பிற்கும் பாடமாக வைத்தால் மற்ற மதப்படிப்போ. ஒழக்கப் பாடமோ தனியாக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற பெரியாரின் கருத்து இங்குச் சிந்திக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறிகளையும், மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ளும் முறையையும் எடுத்துக் கூறும் அருமையான நூல் திருக்குறளைத் தவிர வேறு நீதி நூல் இல்லையென்று பெரியார் கருதுகிறார். பெரியார் ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் அவர் எத்தகைய கருத்துகள் இன்றைய மனித சமுதாயத்திற்குத் தேவையென்று நினைத்தாரோ அந்தக் கருத்துகள் பல திருக்குறளில் உள்ளதைப் பெருமையாக எடுத்துக் கூறி வந்தார்.

திருக்குறள் குறித்து பெரியார் கூறும் கருத்துகள் அவரது ஆய்வு மனப்பான்மையை நமக்கு நன்குப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. சங்க காலந் தொட்டு புலவர்களின் தனிச்சொத்தாக விளங்கிய திருக்குறளை பாமர மக்களின் பார்வையில் கொணர்ந்து திருக்குறளின் பெருமையை உணரும் படிச் செய்தவர் பெரியார் ஆவார்.

திருக்குறளை மக்களின் முன்வைத்த பெரியார் 1948 ஆம் ஆண்டில் திருக்குறளுக்கு மாநாடு கூட்டினார். மேலும் திருக்குறள் நாள் கொண்டாடச் செய்தார். இதன் விளைவாகத் தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், இதழ்களிலும், நூல்களிலும் திருக்குறள் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றது. இதனால் புராணங்கள், இதிகாசங்கள், மூட நம்பிக்கைகள் தாங்கி வந்த நூல்கள் மக்களால் சிறிது சிறிதாக மறக்கப்பட்டு அறிவுக்கு முதன்மை தரும் எண்ணங்கள் தழைத் தோங்கியது எனலாம்.

  1. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கடவுள் என்ற வார்த்தையைக் கையாளவில்லை என்பது மட்டுமல்ல நூல் முழுவதிலுமாக 1330 பாடல்களில் ஒரு இடத்திலும் வள்ளுவர் கடவுள் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிடவில்வை.
  2. தமிழ் மொழியில் உள்ள நல்ல, உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்தியுள்ள வள்ளுவர் கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை.
  3. சாதி, இனம், மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு பொது இலக்கியம் படைத்தவர் வள்ளுவர்.
  4. உலக நடப்புக்கும், வாழ்வுக்கும் கடவுள் காரணமல்ல, இயற்கை நடப்புதான் காரணம் என்பதைக் காட்ட திருக்குறளில் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.

வானின்று உலகம் வழங்கி வருதலால்

               தான்அமிழ்தம் என்று உணரற்பாற்று (குறள் 11)

                 மழையால்தான் உலகம் வாழ்கிறது அதனால் மற்ற உயிர்களும் காப்பாற்றப்படுகிறது என்று உலக நடப்பைப் படம் பிடித்துக் காட்டுகிறார் வள்ளுவர்.

தமிழ் சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றி சாதி, மதம் போன்ற கூறுகள் இல்லாத சமத்தவ சமுதாயத்தை உருவாக்க நினைத்த பெரியாருக்கு அவருடைய கருத்துகளை அரண் செய்வது போலவும், அவரது கொள்கைகளுக்கு வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ள பல்வேறு கருத்துகளை தனக்கேவுரிய ஆய்வாகப் பெரியார் திருக்குறளை அணுகு இருக்கிறார் என்றே தெரிகிறது.

துணை செய்த நூல்கள்

  1. திருக்குறள், உலகத் திருக்குறள் மையம், சென்னை-5.
  2. தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசனார், சாகித்திய அகாடமி, சென்னை.
  3. புரட்சியாளர் பெரியார், சுந்தர வடிவேலு.நெ.து
  4. புரட்டு இமாலயப் புரட்டு, பெரியார், பெரியார் சுயமரிதைப் பிரச்சார நிறுவனம், சென்னை.
  5. பெரியாரும் திருக்குறளும், பெரியார், பெரியார் சுயமரிதைப் பிரச்சார நிறுவனம், சென்னை.

——

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

3 Thoughts

  1. மிக மிக அருமையான கட்டுரை முழுவதுமாக படித்து முடித்தவுடன் நஆழ் மனதிற்கு நெருக்கமாக ஒவ்வொரு கருத்து மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து கட்டுரை ஒவ்வொரு வார்த்தைகளும் எழுத்துக்களும் அவ்வளவு பொருள் பொதிந்தவை நன்றி ஐயா

Leave a Reply

Your email address will not be published.