நடைமுறை வாழ்க்கையும் பெண்ணியமும்  – முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

நடைமுறை வாழ்க்கையும் பெண்ணியமும்

 முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

பெண்ணியம் என்பது பெண்ணை ஓர் உயிர் எனச் சமூகம் அங்கீகரித்து அவளுக்கு ஆணுக்கு நிகராக உரிமையையும், சுதந்திரத்தையும் கொடுக்கத் தூண்டும் எனலாம். சமுதாயத்தில் மனித இனத்தின் தோற்றத்திற்கும் அதன் பல்வேறு செயற்பாடுகளுக்கும் பெண்கள் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றார்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். ஆண்களின் வாழ்வில் ஒரு பகுதியாக அமையும் பெண்களைப் பற்றிப் பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை பலரும் பலவாறாகக் கூறியுள்ளனர். அத்தகைய கருத்துகளை நடைமுறைச் சிந்தனைகளோடு ஒப்பிட்டுக் காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயப் பிரச்சனைகள்

அன்றிலிருந்து இன்றுவரை நமது சமுதாயம் என்பது ஆண்களின் உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த ஆண் சமூகத்தில் பெண்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவும், தங்களை முன்னேறிக் கொள்வதற்காகவும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

   “கல்வி இல்லாத பெண்கள்

    களர் நிலம் : அந் நிலத்தில்

       புல்வினைந் நிடலாம் : நல்ல

              புதல்வர்கள் வினவை தில்லை” 

             என்று பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்து பாடி வந்த காலம் மாறி இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர்.

பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் காலம் போய் இன்று அந்தப் பெண்களே பல வியத்தகு சாதனைகள் செய்து வருவதைக் கண் கூட்டாக நாம் காண்கிறோம்.

குடும்பம் என்றால் இரண்டு இதயங்கள் ஓர் இல்லத்தில் இணையும் அமைப்பு என்பர். நம் நாட்டைப் பொறுத்த வரை பெண் என்பவன் பிள்ளை இயந்திரம், எடுபிடி, வேலையான் பிரச்சனைகள் ஏராளம் எனலாம்.

திருமணம் பேசப்படும் போது ஆணின் விருப்பம் மதிக்கப்பட்டு பெண்ணின் விருப்பம் இடதுகைபோல் எண்ணப்படுகிறது. பெண்ணை மணமுடித்து மணமகன் வீட்டிற்கு அனுப்பும் போது கூட அறிவுரை கூறி அனுப்புவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய நிலை ஆணுக்கு இல்லை. திருமணம் வெறும் உடலுக்காக மட்டும் ஏற்படும் பந்தமன்று அவ்வளவோடு முடிந்து போவதுமில்லை.

அது காலம் காலமாகத் தொடரும் ஆயிரங்காலத்துப் பயிர், நெஞ்சினைவிட்டு அகலாத நினைவு என்பதையும் இந்தச் சமுதாயம் மறந்துவிடக் கூடாது. எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை தந்து இத்தகைய பிணைப்பை போற்ற முன்வர வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் இன்றைக்குச் சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதினாலும் சமத்துவச் சிந்தனை எங்கும் பரவினாலும் தங்கள் எண்ணங்களைப் பெண்கள் செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். எனவே இனியும் பெண்கள் கிணற்றுத் தவளைகளாக இருத்தல் ஆகாது. அரசியல், பொருளாதார சமுதாயச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் பணிக்குச் செல்வது தவிர்க்க இயலாததாகின்றது. இது ஒரு வகையில் பொருளாதாரச் சீர்கேட்டை ஈடுகட்டவும் உறுதுணை புரிகின்றது. பொதுவாக அலுவலகம் செல்லும் மகளிர் வாழ்க்கையில் பல போராட்டங்களையும் பலருடைய எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் பெற்றோரால் படிக்க வைக்கப்பட்ட, கல்விக்குரிய பணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சனை என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையின் விளைவு என்பர். பெண்கள் ஆண்களின் போக்கை எதிர்த்து நிற்காதவரை இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இதன் பிடிக்கும் அகப்பட்டுப் பெற்றோர்களின் உள்ளம் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதை நாம் பார்க்கிறோம்.

இன்றைக்கு வரதட்சனைக்கு மூல காரணம் ஒரே சாதியில் திருமணம் புரிவதாகும் காதல் மணம், கலப்பு மணம் புரிந்தால் இந்த வரதட்சணைச் சிக்கல் ஓரளவு குறையும். எனவே வரதட்சணை ஒழிப்புக்கு இவ்வுலகில் சிறந்த ஒரே ஆயுதம் காதல் மணம் என்பர்.

ஊடகங்கள் 

பண்டைய இலக்கியங்கள் பெண்களின் கற்பைப் பெரிதும் போற்றின. கற்புடைய மனைவியைப் பெற்றவனே உலகில் தாம் வாழும் காலத்தில் பெரும்பேறு பெற்றவனாகக் கருதப்பட்டான்.

               “பெண்ணின் பெருந்தக்க யாவுன கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின்” – எனவும்

 

                                            “தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுதெழுவான்

                                                          பெய்யெனப் பெய்யும் மழை” 

          எனவும் வள்ளுவர் கற்பின் மேன்மையைப் பாராட்டியுள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி எனும் உரிய நோக்கம் இன்று சற்றே நெகிழ்ந்து வருவதைச் சமுதாயத்தை உற்றுநோக்கும் போது உணரலாம். மேலும்,

 “கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு

    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” 

        என இக்காலத்திற்குக் கற்பிற்குப் புது விளக்கம் கண்டு அதனை இருபாலர்க்கும் பொதுவாக்கவும் பாரதி போன்றவர்கள் சிந்தித்தனர்.

“கற்பு என்றால் வாழ்நாள் முழுவதும் ‘ஒருவன் ஒருத்தி’ யாக வாழ்வது என்று சொல்வார்கள். அது பழங்காலத்திற்கு மிகப் பொருந்தும். பழங்காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி மட்டும் இருந்தது. இந்தக் காலத்தில் யந்திரத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்தலும் அனபவித்தலும் மிகுதியாக உள்ள காலம் இது. ஆகவே ஒருவனை விட்டு இன்னொருவருடன் வாழும்படி நேரலாம். ஒருவரான விடாமல் இன்னொருவருடன் வாழ்வதுதான் தவறு. எப்போது எவனுடன் வாழ்கின்றானோ, அவனுக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும் அதுதான் கற்பு” என கற்பிற்குப் புது விளக்கம் தருகிறார். டாக்டர்.மு.வரதராசனார்.

இன்று பலரிடம் தேவைக்கு அதிகமாகப் பொருட்களை வாங்கி நுகரவேண்டுமென்ற வேட்கை அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஊடகங்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் கண்மூடித் தனமான ஆசைகளை வளர்த்து விடுகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி வேறு எந்த விதமான பொருட்களை அறிமுகப்படுத்தும் போதும் பெண்களையே முதன்மையாகப் பயன்படுத்துகின்றனர்.

தொலைக்காட்சியின் தொடர்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பாலியல் வன்முறைகளையும் நகைச்சுவையாக்கி இத்தகைய போலித்தனங்களை வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றனர். இது தவிர பெண்கள் குடும்பத்தைப் பேணுபவனாகவும் ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு போற்றுபவனாகவும் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாதவளாகவும் அனைத்திற்கும் கணவனையே சார்ந்து இருப்பவள் ஆகவும் காட்டப்படுகிறாள். வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாவோர் தாம் வாங்கும் ஊதியம் முழுமையையும் கணவனிடம் தந்து விட்டு தங்களின் சிறு தேவைக்குக் கூட கணவனிடம் கையேந்துபவர்களாக நாடகங்கள், திரைப்படங்கள் தொடர்களிலும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

பாலியல் தொடர்பான எதிர்மறை கருத்துகள் செய்தித் தாள்கள் மூலமாகவும் இலக்கியங்கான நாவல், சிறுகதை போன்றவற்றின் மூலமாகவும் பெண்களின் அடிமைத் தனங்கள் வளர்க்கப்படுகின்றன.

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் சமுதாயத்தின் அகத்திலும் புறத்திலும் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய அனைத்துக்கும் தீர்வுகாணும் முயற்சியில் பெண்ணியம் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. பெண்களை அடிமைப்படுத்தும் செயல்களுக்கு ஆண்கள் காரணமாக இருந்தாலும் பெண்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள தயாராக வேண்டும். தங்களிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொண்டு மேலும் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்களை மனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்ணின் சிக்கல்களை ஆழமான சமூக வரலாற்றுப் பின்னணியோடு பொருத்திப் பார்த்துதான் அவர்களின் மீதான அடக்குகளை இனங்கண்டு கொள்ள முடியும். குடும்பம், அலுவலம் பிற சமுதாயக் களங்கள் என அனைத்திலும் நிலவும் பெண்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டால் தான் இந்த நூற்றாண்டிற்குள்ளாவது முழுமையான பெண்ணியத்தை அடையமுடியும்.

துணை நூல்கள் :

1.எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு

2.வீ.உண்ணாமலை, புதுக்கவிதையில் சமுதாயம்;

3.அன்னி தாமசு, தமிழக மகளிரியல்.

—–

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.