பெரியாரின் கொள்கைகள் : ஆக்கங்களா? சிதைவுகளா? – முனைவர் ப.கமலக்கண்ணன்

Print Friendly, PDF & Email

பெரியாரின் கொள்கைகள் : ஆக்கங்களா? சிதைவுகளா?

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு

     தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

                  மண்டைச் சுரப்பை உலகு தொழும்

             மனக் குகையில் சிறுத்தை எழும்.

                என்ற வரிகளுக்கு ஏற்ப தென்னாட்டில் பகுத்தறிவுப் பாசறையாய்த் தோன்றித் தனமான இயக்கத்தின் தந்தையாகவும், மாபெரும் சீர்திருத்த இயக்கத்தின் தனிப் பெருந்தலைவராகவும் திகழ்ந்தவர் பெரியார். நடுங்கும் வயதிலும் நடுங்காத கொள்கைப் பிடிப்புகளோடு சிந்தனைப் புரட்சியையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் உண்டாக்க அரும்பாடுபட்டவர். தன்னை இழிவு அழிவு வேலைக்காரன் என்று கூறிக் கொண்டவர். மனித இனத்தின் முன்னேற்ற வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அனைத்தையும் புறந்தள்ள முனைந்தவர். உயிரை விடவும் கொடுத்து பெற வேண்டிய மதிப்பும் பெறுமானமுமானது “தன் மதிப்பு” என்றவர்.

அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் பகைவர்களின் சொல்லடி, கல்லடிகள், செருப்புவீச்சு, கழிவுப் பொருள் வீச்சு போன்ற எண்ணற்ற இடர்ப்பாடுகளையெல்லாம் தாங்கிக் கொண்டு தன்மானம் இழந்து தரிசு நிலமாகக் கிடந்த தமிழகத்தையும், மக்களையும் தலைநிமிரச் செய்தவர். எத்தனையே அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்த அந்தச் சீர்திருத்தச் செம்மலின் கொள்கைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் வீழ்ச்சியா? அத்தகைய வீழ்ச்சிக்குக் காரணங்கள் எவையெவை என்று நடுவு நிலை தவறாமல் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இருண்டு கிடந்த அய்ரோப்பாவில் ஒளியேற்றப் பாடுபட்ட வால்டேர், பிராட்லா, இங்கர்சால் போன்ற பகுத்தறிவாளர்களுக்குக் கூட பாரம்பரியமான பிறவி இழிவுகளைப் பற்றிய சிந்தனை எழவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மாந்தரிடையே புரையோடிவிட்ட ஏற்றத்தாழ்வெனும் புன்மைக்கு மருத்துவம் கண்டவர் பெரியார்.

மனிதனுடைய பகுத்தறிவை அளவு கோலாகக் கொண்டு வாழ்வில் பல்வேறு இயல்புகளையும் நிலைகளையும், அமைப்புகளையும், சூழல்களையும், சிக்கல்களையும் அலசி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியத் தூண்டியவர் பெரியார் என்று க.த.திருநாவுக்கரசு அவர்கள் கூறுவார்.

நம்முடைய இந்தியக் துணைக் கண்டத்தில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெருகிய நிலையிலும் அண்ணல் காந்தியார் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரசு என்று பேராயக் காட்சியானது சுக்கு நூறாக உடைந்தது. காந்தியார், தான் உயிருடன் இருந்த போதோ காங்கிரசைக் கலைத்து விடுங்கள். அதன் வேலை முடிந்து விட்டது என்று தன்னுடைய “அரிஜன்” ஏட்டில் எழுதினார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகள் அறிஞர் அண்ணாவின் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார். தமிழக அரசால் 1970 வரை படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்ட அவரின் கோட்பாடுகளும் கொள்கைகளும் இன்றைக்கு மேடை அளவில் மட்டுமே மக்களிடம் பேசப்பட்டு குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் வாக்குரிமை பெற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையோடு செயல்படுத்தப்பட்டு வருவது அன்றாட நிகழ்வாகிட்டது.

தங்களுடைய கட்சிகளில் “திராவிட” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட அனைத்து அரசியலாரும் அத்தகைய ஒன்றுப்பட்ட நிலையைத்தான் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர். பெரியாhரின் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற அனைத்து கட்சிகளும் அரசியல் ஆதாயத்தை விரும்பிச் சென்றவை தாம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் அவர்கள் அனைவரின் நிலையையும் தடுமாற்றத்துடன் இயங்கி வருவதை நாம் ஒவ்வொரு நாளும் உள்வாங்கி வருகிறோம்.

 • அரசியல் ஆதாயம்
 • தன் நல வேட்கை
 • தன் விளம்பரம்
 • பொதுத் தொண்டில் ஒழுக்கமின்மை

போன்ற இத்தகைய இழிவான குணங்களுக்கு ஆட்பட்டு அந்த மனித நேய மாமனிதரின் நிலையான கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப மக்களை திருப்திப்படுத்தும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் எடுத்துரைத்த பல அறிவுரைகளையும் கூர் நோக்கு கருத்தியல்களையும் தமிழின இயக்கங்களும் திராவிடக் கட்சிகளும் புறக்கணித்து வருவது வேதனைக்குரியது. இனிமேலாவது எதிர்கால நலன் கருதி தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் குறித்த அவரது கருதுகோள்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். பெரியாரின் பெயரை முன்னெடுத்து அரசியலில் இலாபம் அடைவது மட்டுமே இலக்காகி விடக் கூடாது.

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய திராவிட அரசியலாளர்கள் பெரியாரிய கருத்துகளை உண்மையாக மதிப்பவர்களாக இருப்பின்,

 • அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
 • தமிழ் மொழியை பயிற்று மொழி, ஆட்சி மொழியாக்குவதில் முழுமை பெற்றிருக்க வேண்டும்.
 • பிற மொழியிலுள்ள அறிவார்ந்த நூல்களைத் தமிழுக்குக் கொணர்ந்திருக்க வேண்டும்.
 • மதுவின் மூலம் அரசு வருமானத்தைப் பெருக்குவதை இழிவாக நினைத்திருக்க வேண்டும்.
 • சாதியக் கட்சிகளோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 • மதவாத உறவு அறுபட வேண்டும்.
 • அறிவியலின் புதுமைகளை வரவேற்று ஆராதிக்க வேண்டும் போன்ற சமுதாய நலன்களைப் புறந்தள்ளி மக்களிடம் வாக்குகளை மட்டும் பெற நினைக்கும் போக்கு பெரியாரின் கொள்கைகள் இன்று நிலைபெற முடியாததற்கு காரணமாக இருந்து வருகிறது. இத்தகைய போக்குத் தொடருமானால் வருங்காலத்தில் பெரியாரின் தனித்துவங்களும், அவரின் மனித நேயப் பண்புகளும் மறைந்து அந்த மாண்புமிகு மனிதரின் அடிச்சுவட்டை இந்த மண் மறந்து விடக் கூடிய அபாய நிலைத்தான் ஏற்படும். எனவே தமிழினத்தைப் பழமைப் பிடியிலிருந்து விடுவித்து புதுமைப் காற்றை நுகரச் செய்த அவரின் அறிவுக் கோட்பாடுகளும், மானிடம் தழுவிய பொதுப் பணிகளும், சமுதாயத்தில் பிறவியின் பெயரால் உள்ள எற்றத் தாழ்வுகளை அகற்றி சமதர்மப் பூங்காற்றை உலகச் செய்த சமனியத் தத்துவங்களும் மொழியையும், இலக்கியத்தையும் மக்கள் மயமாக்கிய அந்த மாமேதையின் மகத்துவமும் என்றென்றும் இம்மண்ணில் நிலைபெற வேண்டும். இந்த மானுடச் சமுதாயம் பயனுற வேண்டுமானால் போலிகளைக் களைந்து விட்டு, அனைத்துத் தரப்பினரும் விருப்பு வெறுப்புகளை மறுத்து, சாதியைக் கடந்து, மதத்தை மறந்து, பிரிவினையைத் துறந்து, மக்களின் மேன்மை ஒன்றையே கருது கோளாகக் கொண்டு சமுதாயப் பணியாற்ற முன் வரவேண்டும்.
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.