
மனிதனுடைய பகுத்தறிவை அளவுகோலாகக் கொண்டு வாழ்வின் பல்வேறு நிலைகளையும், இயல்புகளையும் கள ஆய்வின் மூலம் கண்டறிந்து தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

தமிழனின் உரிமைகள் எந்த வகையில் பாதித்தாலும் அதனைக் களைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். தமிழனின் வாழ்வு செழிக்க தமிழகத்தில் தன்னையே அர்ப்ணித்தவர். மனித மாண்மையும், சமத்துவத்தையும் இலக்காகக் கொண்ட உலகுதழுவிய அறிவியல் தன்மதிப்பாளர். அத்தகைய சான்றோரின் கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்வாங்கி கொண்டு வாழ்ந்து வருபவர் இந்நூலின் ஆசிரியர் ஈரோடு அறிவுக்கன்பன்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்தும், அவரது தொலை நோக்கு தேடல்கள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகளைக் கணிப்பதற்கு இன்றைக்கும் தேவை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

கடவுள், மதம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியலின் முதன்மை போன்ற அய்யாவின் கருத்துகள் கட்சிவேறுபாடின்றி, அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், அறிவுஜீவிகள் அலை அலையாய் திராவிட இயக்கத்திற்கு வருகை தந்தனர்.

ஆனால் இன்று திரைப்பட மோகம், இணையத்தின் ஈர்ப்பு, தன்னல வேட்கைகள் மேலிட உறுதியான முடிவை எட்டமுடியாமல் உருக்குலைந்து தேய்ந்து வருவதை நூல் முழுவதும் உரிய சான்றுகளுடன் விவரிக்கிறார்.

நமது முன்னோரின் மொழி மற்றும் இன மாண்பிற்கான பங்களிப்பினை எடுத்துக்காட்டி வருங்கால தலைமுறை தலைநிமிர்ந்து செயலாற்ற இந்த நூலில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளை பதிவு செய்து உள்ளார்.
உலகின் முதன் மொழி தமிழ்
முதல் மாந்தன் தமிழன்
என்ற பாவாணரின் வரிகளுக்கு ஆக்கம் தேடுவதுதான் இந்த நூலாசிரியரின் பணியாக அமைந்துள்ளது.

தமிழனின் படிப்படியான வீழ்ச்சி

நிறம் மாறும் தமிழனின் விழாக்கள்

சுதிமாறும் இசை

பிறமொழியாகும் பெயர்கள்

தமிழைப் புறக்கணிக்கும் தமிழ் நிறுவனங்கள்

தன்மானம் இழக்கும் தமிழர்கள்

தமிழைப் புறந்தள்ளும் தமிழர்கள்

தமிழ்க் கொலை நடத்தும் எழுத்துக்கள்

குடியால் மடியும் தமிழ்க் குடிகள்

சாதிவெறி, பண்பாட்டுச் சிதைவுகள்
எனப் பல்வேறு கருத்தியல்களை மையப்படுத்தி சமுதாய அக்கறையோடு இந்நூல் உருவாக்கியுள்ளார்.
இவர் அறிவுக்கன்பன் மட்டுமல்ல
பகுத்தறிவிற்கு நண்பன் எனலாம்.

இவர் ஏற்கனவே படைத்த ஒவ்வொரு நூலின் தலைப்பும் மாற்றுச் சிந்தனைக்கும் மரபின் மீறலுக்கும் சரியானச் சான்றுகளாகும்.
இவரது படைப்பும், விடாமுயற்சியும்
இளைய உள்ளங்களுக்கு முன்மாதிரி
இவரது படைப்பைத் தமிழுலகம்
படித்து பயன் பெற வேண்டும்