திராவிட இயக்கமும் தமிழ் வளர்ச்சியும்
முனைவர் ப.கமலக்கண்ணன்
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்த்துறை
சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி
ஈரோடு.
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது, பண்பட்டது சிறந்த இலக்கிய வளம் உடையது பல்வேறு காலங்களில் இன்னல்களுக்கும் இடிபாடுகளுக்குள்ளும் சிக்கித் தவித்தாலும் இன்று வரை தனது தனித்தன்மைகளை இழக்காமல் சிறப்புடன் வாழ்ந்து வருவது எண்ணத் தக்கது.
ஒரு மொழியின் வளாச்சியென்பது அம்மொழி பேசுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைவதல்ல. காலத்திற்கு ஏற்பவும், மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் அது பயன்படும் தன்மைகளைக் கொண்டு வளர்ச்சியைக் கணக்கிடவேண்டும். தமிழின் வரலாற்றைப் பொதுவாகவும் சிறப்பாகவும் நோக்கினால் அதன் வடிவங்களும், கருத்துகளும் காலந்தோறும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நெகிழ்வாக நிகழ்ந்துள்ளன எனலாம்.
சங்க காலத்தில் அகம், புறப் பாடல்களில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய கவிஞர்களும், பாடைப்பாளர்களும் பிற்காலத்திலும், காப்பியக் காலம் மற்றும் இடைக் காலத்திலும் தங்களின் பாதைகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து தற்காலத்தில் தான் இலக்கியத்தை மக்களின் ஊடகமாக மாற்றினர். இந்நிலையில் மக்களின் வாழ்வியலின் எதார்த்தங்களை இலக்கியங்களில் வெளிக் கொணரும் போக்கும் வெளிப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிக்கான மாற்றித்திற்கு அடிப்படைக் காரணம் திராவிட இயக்கம் என்றால் அது மிகையாகாது.
இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் தமிழகத்தில் மாபெறும் சிந்தனை மாற்றத்திற்கு அடித்தளமிட்டது என்பது வரலாறு.
சமூகநீதி, தன்மான வாழ்வு, பெண் சமத்துவம், வகுப்புவாரி உரிமை, ஜனநாயக உணர்வு, கல்வியின் இன்றியமையாமை ஆகியவை தழைக்க வழிகண்ட முதல் இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த இயக்கத்தின் தமிழ்ப் பணியானது தமிழருடைய சமுதாயச் சிந்தனையை அறிவதற்கு சமுதாய, இன, வரலாற்று வழியாக நமக்குப் பெரிதும் உதவுகிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இந்த நூற்றாண்டில் உண்டான விழிப்புணர்வுக்கு திராவிட இயக்கம் தான் முழு முதற்காரணமாகும்.
திராவிட இயக்க எழுத்தாளர்களால் தமிழ் இலக்கியம், மொழி ஆகிய துறைகளில் புதுமை மிகு எழுச்சி உண்டாயிற்று.
எளிமையும், கருத்துப் புலப்பாட்டுத் தன்மையும் காணப்பட்டன. சமுதாயம், பண்பாடு, கலை ஆகிய துறைகளிலும் பகுத்தறிவை அளவுக் கோலாகக் கொண்டு காணுகின்ற வழக்கத்தை திராவிட இயக்கத்திகனர் ஏற்படுத்தினர். தமிழர்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை அறிய வேண்டும் என்ற ஆவலின் மேலிடலால் தமிழும் புத்துயிர் பெற்றது.
சாதிகளை, மூடப்பழக்கங்களை, சமய இலக்கியங்களி;ன குறைபாடுகளை, பெண்ணிய ஏற்றத் தாழ்வுகள், பகுத்தறிவின் துணை கொண்டு மரபுகளைக் கட்டுடைத்தல் என்ற தூய்மைப் பணி இலக்கியம் மற்றும் மொழி வழியே திறம்பட நடைபெற்றது.
பாடு பொருள் மாற்றம்
இன்றைய தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடையேயும், பிரிவுகளிடையேயும் பிற அமைப்புகளிலும் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஊடுருவி இருப்பதை மறுக்க முடியாது. ஆகவே பெரியாரின் கருத்துகள் புகாத இடமேயில்லை என்று தான் கூறவேண்டும். கலைத்துறை, இலக்கியத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் இவரது கருத்துக்களின் செல்வாக்கை உணராலம்.
‘தமிழக மக்களுக்குத் தமிழ் உணர்ச்சி வளர வழிகோலியவை சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் ஆகும். தமிழ் முதன் முதலாக மக்கள் மயமானது இவர்களின் முயற்சியால்; என்ற டாக்டர் பொற்கோ அவர்களின் கருத்து உணரத்தக்கது. இலக்கியங்களையும், பாடு பொருள்களையும் மொழி என்று கருதிய நிலை மாறி, பாடு பொருள்களுக்கே மொழிதான் இன்றியமையாதது என்ற தெளிவான நிலை கால்டுவெல் அவர்களின் காலத்திற்குப் பின்பு தான் வேரூன்றியது. ஆனால் இலக்கியங்களில் இருந்த பாடுபொருளில் மிகப் பெரிய மாற்றத்தையும் திருப்பத்தையும் உண்டாக்கியது திராவிட இயக்கம்.
எவரோ? கூறினார். எதற்காகவோ கூறினார்? எப்போதோ கூறினார் என்பதற்காக வாளாஇராமல் மேலும் மேலும் உண்மைகளையும் அதன் தன்மைகளையும் வெளிப்படுத்துவது தான் இன்றையக் காலத்தின் தேவையென்றும் அதுதான் அறிவியல் பார்வையாகுமென்று தொலைநோக்கோடு எடுத்துரைத்தார் பெரியார்.
திராவிடர்களின் வேதம் திருக்குறள் என்றதோடு திருக்குறளுக்காக 1948 ஆம் ஆண்டு மாநாடு கூட்டினார். அதன் மூலம் திருக்குறளின் பெருமையை மக்கள் உணரும்படி செய்தார். இதனால் தமிழர்களிடையே இன உணர்வும் பண்பாட்டு உணர்வும் மேலோங்கியது. புனிதமானது என்பதற்காக எதையும் ஆய்ந்தறியாமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நன்மையானது, அனைவருக்கும் தேவையானது. காலத்திற்கு ஏற்றது என்று அளந்து பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
எத்தனை முறை இறைத்தாலும் மீண்டும் நச்சு நீரே கிணற்றில் சுரக்கும் என்றால் அத்தகைய கிணற்றை தூர்த்து மூடி விடுவதே அறிவுடைமை. அதே போல் ஏழ்மைக்கும் கீழ்தைக்கும் ஊற்றாக உள்ள மதக் கிணற்றை தூர்த்து மூடிவிட வேண்டும் என்று பெரியார் தெளிவுபடுத்தினார்.
புனிதபாட்டுத் தன்மை நீக்கம்
இந்து சாத்திரங்களும், புராணங்களும், சடங்குகளும் மக்கள் இனத்தின் சுய சிந்தனையை, துணிச்சிந்தனையை, துணிச்சான முயற்சியை, தன்னம்பிக்கையே, தோழமை உணர்வை சமத்துவப் போக்கை முளையிலேயே நசுக்கி வருவதைப் பகுத்தறிவு இயக்கத்தைப் போல வேறு எந்த இயக்கமும் வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம். தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை இன ஒற்றுமையை அழித்துக் கொண்டிருக்கும் பக்தி இலக்கியங்களை நாம் தள்ளி வைக்க வேண்டுமென்றும் மனைவி இருக்க வேண்டிய இடத்தில் மட்டமான வேறொருத்தியை வைத்து வணங்கி வருகிறோம். நமது இலக்கியப் பாதை இப்படியே இருந்தால் நாளைய உலகம் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும். நம் கவிஞர்கள் படைப்பாளர்கள் தெரியாமல் செய்து விட்ட மூட இலக்கியப் பாதையை மூடி புதிய பகுத்தறிவுப் பாதைக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
அறிவியல் வளர்ச்சியை உள்ளடக்கிய இலக்கியங்களைப் படைப்போம். பகுத்தறிவையும் அறவியலையும் கலந்து இலக்கியங்களைப் படைக்க வேண்டுமென்று பெரியார் அறிவுறுத்தினார். பெரியார் அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக தம் இடையறாத சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தமது பகுத்தறிவு கருத்துகளை முழங்கினார். அதிலும் மக்கள் விரும்பாததும், வெறுக்கக் கூடியதுமான கருத்துகளையும், அவர்கள் உயிரினும் மேலாக நம்பித் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும் புராண வரும் புராண, இதிகாசங்களையும், பழக்க வழக்கங்களையும் அவர்கள் விரும்பும் வண்ணம் எடுத்துரைத்தார்.
எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குமோ
அந்த மொழிதான் மக்கள் மொழியாக விளங்கும்
என்பார். மு.வ. இந்தக் கருத்துக்கு ஏற்ப திராவிட இயக்கம் தாய் மொழியாகிய தமிழின் வாயிலாக எண்ணற்ற இலக்கியங்களைத் தமிழ் சமுதாயத்திற்கு படைத்தளிக்க உதவியது.
கலையும் இலக்கியமும் மக்களின் உணர்வுகளோடு ஒன்றி வாழ்வில் இன்பத்தையும் மறுமலர்ச்சியையும் தரும் அற்புதப் பெட்டகமாகும். அதனால் தான் திராவிட இயக்கம் மேற்கண்ட இரண்டையும் முதன்மைக் கருவியாகக் கொண்டு தனது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்றது. அதற்கென்று திராவிட இயக்கத்தினரால் கொள்கைகளைப் பரப்புவதற்கென்று ஏராளமான நாளேடுகளும், திங்களிதழ்களும், கிழமை இதழ்களும் அவ்வப்போது வெளிவந்தன.
இவ்வாறு தமிழகத்தில் புதிய சிந்தனைகளுக்கு இலக்கியங்கள் வழியாக வடிவம் தந்தனர். மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு பகுத்தறிவு சார்ந்த இலக்கியக் கருத்துருக்கள் படைத்தனர். அவைகளில் மக்கள் அனைவரும் சமம், அனைவருக்கும் பொது என்ற உயரிய சிந்தனைகளை மலரச் செய்தனர்.
குறிப்புகள்
1.டாக்டர் மு.வரதராசனார் – மொழி வரலாறு.
2.வ.ரேணுகா தேவி – திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3.டாக்டர் பொதிகை தமிழரசன் – கலையும் இலக்கியமும்
4.முனைவர் பொற்கோ – தமிழ் உணர்ச்சி, தமிழ் வளாச்சி, தமிழ் ஆட்சி
———