நடைமுறை வாழ்க்கையும் பெண்ணியமும்  – முனைவர் சி.அங்கயற்கண்ணி

நடைமுறை வாழ்க்கையும் பெண்ணியமும்

 முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

பெண்ணியம் என்பது பெண்ணை ஓர் உயிர் எனச் சமூகம் அங்கீகரித்து அவளுக்கு ஆணுக்கு நிகராக உரிமையையும், சுதந்திரத்தையும் கொடுக்கத் தூண்டும் எனலாம். சமுதாயத்தில் மனித இனத்தின் தோற்றத்திற்கும் அதன் பல்வேறு செயற்பாடுகளுக்கும் பெண்கள் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றார்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். ஆண்களின் வாழ்வில் ஒரு பகுதியாக அமையும் பெண்களைப் பற்றிப் பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை பலரும் பலவாறாகக் கூறியுள்ளனர். அத்தகைய கருத்துகளை நடைமுறைச் சிந்தனைகளோடு ஒப்பிட்டுக் காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயப் பிரச்சனைகள்

அன்றிலிருந்து இன்றுவரை நமது சமுதாயம் என்பது ஆண்களின் உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த ஆண் சமூகத்தில் பெண்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவும், தங்களை முன்னேறிக் கொள்வதற்காகவும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

   “கல்வி இல்லாத பெண்கள்

    களர் நிலம் : அந் நிலத்தில்

       புல்வினைந் நிடலாம் : நல்ல

              புதல்வர்கள் வினவை தில்லை” 

             என்று பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்து பாடி வந்த காலம் மாறி இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர்.

பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் காலம் போய் இன்று அந்தப் பெண்களே பல வியத்தகு சாதனைகள் செய்து வருவதைக் கண் கூட்டாக நாம் காண்கிறோம்.

குடும்பம் என்றால் இரண்டு இதயங்கள் ஓர் இல்லத்தில் இணையும் அமைப்பு என்பர். நம் நாட்டைப் பொறுத்த வரை பெண் என்பவன் பிள்ளை இயந்திரம், எடுபிடி, வேலையான் பிரச்சனைகள் ஏராளம் எனலாம்.

திருமணம் பேசப்படும் போது ஆணின் விருப்பம் மதிக்கப்பட்டு பெண்ணின் விருப்பம் இடதுகைபோல் எண்ணப்படுகிறது. பெண்ணை மணமுடித்து மணமகன் வீட்டிற்கு அனுப்பும் போது கூட அறிவுரை கூறி அனுப்புவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய நிலை ஆணுக்கு இல்லை. திருமணம் வெறும் உடலுக்காக மட்டும் ஏற்படும் பந்தமன்று அவ்வளவோடு முடிந்து போவதுமில்லை.

அது காலம் காலமாகத் தொடரும் ஆயிரங்காலத்துப் பயிர், நெஞ்சினைவிட்டு அகலாத நினைவு என்பதையும் இந்தச் சமுதாயம் மறந்துவிடக் கூடாது. எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை தந்து இத்தகைய பிணைப்பை போற்ற முன்வர வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் இன்றைக்குச் சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதினாலும் சமத்துவச் சிந்தனை எங்கும் பரவினாலும் தங்கள் எண்ணங்களைப் பெண்கள் செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். எனவே இனியும் பெண்கள் கிணற்றுத் தவளைகளாக இருத்தல் ஆகாது. அரசியல், பொருளாதார சமுதாயச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் பணிக்குச் செல்வது தவிர்க்க இயலாததாகின்றது. இது ஒரு வகையில் பொருளாதாரச் சீர்கேட்டை ஈடுகட்டவும் உறுதுணை புரிகின்றது. பொதுவாக அலுவலகம் செல்லும் மகளிர் வாழ்க்கையில் பல போராட்டங்களையும் பலருடைய எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் பெற்றோரால் படிக்க வைக்கப்பட்ட, கல்விக்குரிய பணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சனை என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையின் விளைவு என்பர். பெண்கள் ஆண்களின் போக்கை எதிர்த்து நிற்காதவரை இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இதன் பிடிக்கும் அகப்பட்டுப் பெற்றோர்களின் உள்ளம் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதை நாம் பார்க்கிறோம்.

இன்றைக்கு வரதட்சனைக்கு மூல காரணம் ஒரே சாதியில் திருமணம் புரிவதாகும் காதல் மணம், கலப்பு மணம் புரிந்தால் இந்த வரதட்சணைச் சிக்கல் ஓரளவு குறையும். எனவே வரதட்சணை ஒழிப்புக்கு இவ்வுலகில் சிறந்த ஒரே ஆயுதம் காதல் மணம் என்பர்.

ஊடகங்கள் 

பண்டைய இலக்கியங்கள் பெண்களின் கற்பைப் பெரிதும் போற்றின. கற்புடைய மனைவியைப் பெற்றவனே உலகில் தாம் வாழும் காலத்தில் பெரும்பேறு பெற்றவனாகக் கருதப்பட்டான்.

               “பெண்ணின் பெருந்தக்க யாவுன கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின்” – எனவும்

 

                                            “தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுதெழுவான்

                                                          பெய்யெனப் பெய்யும் மழை” 

          எனவும் வள்ளுவர் கற்பின் மேன்மையைப் பாராட்டியுள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி எனும் உரிய நோக்கம் இன்று சற்றே நெகிழ்ந்து வருவதைச் சமுதாயத்தை உற்றுநோக்கும் போது உணரலாம். மேலும்,

 “கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு

    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” 

        என இக்காலத்திற்குக் கற்பிற்குப் புது விளக்கம் கண்டு அதனை இருபாலர்க்கும் பொதுவாக்கவும் பாரதி போன்றவர்கள் சிந்தித்தனர்.

“கற்பு என்றால் வாழ்நாள் முழுவதும் ‘ஒருவன் ஒருத்தி’ யாக வாழ்வது என்று சொல்வார்கள். அது பழங்காலத்திற்கு மிகப் பொருந்தும். பழங்காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி மட்டும் இருந்தது. இந்தக் காலத்தில் யந்திரத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்தலும் அனபவித்தலும் மிகுதியாக உள்ள காலம் இது. ஆகவே ஒருவனை விட்டு இன்னொருவருடன் வாழும்படி நேரலாம். ஒருவரான விடாமல் இன்னொருவருடன் வாழ்வதுதான் தவறு. எப்போது எவனுடன் வாழ்கின்றானோ, அவனுக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும் அதுதான் கற்பு” என கற்பிற்குப் புது விளக்கம் தருகிறார். டாக்டர்.மு.வரதராசனார்.

இன்று பலரிடம் தேவைக்கு அதிகமாகப் பொருட்களை வாங்கி நுகரவேண்டுமென்ற வேட்கை அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஊடகங்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் கண்மூடித் தனமான ஆசைகளை வளர்த்து விடுகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி வேறு எந்த விதமான பொருட்களை அறிமுகப்படுத்தும் போதும் பெண்களையே முதன்மையாகப் பயன்படுத்துகின்றனர்.

தொலைக்காட்சியின் தொடர்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பாலியல் வன்முறைகளையும் நகைச்சுவையாக்கி இத்தகைய போலித்தனங்களை வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றனர். இது தவிர பெண்கள் குடும்பத்தைப் பேணுபவனாகவும் ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு போற்றுபவனாகவும் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாதவளாகவும் அனைத்திற்கும் கணவனையே சார்ந்து இருப்பவள் ஆகவும் காட்டப்படுகிறாள். வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாவோர் தாம் வாங்கும் ஊதியம் முழுமையையும் கணவனிடம் தந்து விட்டு தங்களின் சிறு தேவைக்குக் கூட கணவனிடம் கையேந்துபவர்களாக நாடகங்கள், திரைப்படங்கள் தொடர்களிலும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

பாலியல் தொடர்பான எதிர்மறை கருத்துகள் செய்தித் தாள்கள் மூலமாகவும் இலக்கியங்கான நாவல், சிறுகதை போன்றவற்றின் மூலமாகவும் பெண்களின் அடிமைத் தனங்கள் வளர்க்கப்படுகின்றன.

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் சமுதாயத்தின் அகத்திலும் புறத்திலும் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய அனைத்துக்கும் தீர்வுகாணும் முயற்சியில் பெண்ணியம் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. பெண்களை அடிமைப்படுத்தும் செயல்களுக்கு ஆண்கள் காரணமாக இருந்தாலும் பெண்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள தயாராக வேண்டும். தங்களிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொண்டு மேலும் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்களை மனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்ணின் சிக்கல்களை ஆழமான சமூக வரலாற்றுப் பின்னணியோடு பொருத்திப் பார்த்துதான் அவர்களின் மீதான அடக்குகளை இனங்கண்டு கொள்ள முடியும். குடும்பம், அலுவலம் பிற சமுதாயக் களங்கள் என அனைத்திலும் நிலவும் பெண்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டால் தான் இந்த நூற்றாண்டிற்குள்ளாவது முழுமையான பெண்ணியத்தை அடையமுடியும்.

துணை நூல்கள் :

1.எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு

2.வீ.உண்ணாமலை, புதுக்கவிதையில் சமுதாயம்;

3.அன்னி தாமசு, தமிழக மகளிரியல்.

—–

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

குழந்தைப் பாடல்களில் தமிழியக் கருத்துகள் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

 

குழந்தைப் பாடல்களில் தமிழியக் கருத்துகள்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டு சிறப்பாக வரைத் தொடங்கியது. குழந்தை இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்திற்குப் புது வரவு என்றால் அது மிகையாகாது. குழந்தை இலக்கியத்தில் பாடல்கள், கதைகள், கதைப் பாடல்கள் என்று பல்வேறு கூறுகள் இருந்தாலும் பாடல்கள் என்பது குழந்தைகளை ஈர்க்கும் ஊடகமாக செயல்படுகிறது. அத்தகைய பாடல்களில் நுவலும் பொருள்கள் எளிய நடையில் பழகு தமிழில் எடுத்துக் கூறப்படுமேயானால் அது சிறப்பாகும்.

தமிழ்நாடு

மாந்தர் ஒவ்வொருவருக்கும் மொழியும், நாடம் இரு கண்களென்பர் கவிஞர். நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாதவர் நடைபினமென்பர். எனவே குழந்தைகள் தங்கள் இளம்பருவம் தொட்டே பிறந்த நாட்டின் மீது பற்றும் அன்பும் கொண்டவர்களாக விளங்குதல் வேண்டும். மேலும் சமுதாயச் சிற்பிகளான கவிஞர்கள் இளம் நெஞ்சில் மொழிப்பற்றினை, நாட்டின் மீது மதிப்பினை ஏற்படுத்த தனிக் கவனம் அவசியம்.

நீர் வளமும் நில வளமும் நிலவிய நன்னாடு

        ஏர் வளத்தின் பேர் வளத்தால் ஏற்றமுள்ள நாடு

வாழை பலா மா மரங்கள் வளமிகுந்த நாடு

                       தாழை பனை தென்னை இவை தழைத்துயர்ந்த நாடு

                இயற்கை வளமும், செல்வமும் மிக்க தமிழ்நாடு, தனக்கெனத் தனித்துவம் நிறைந்தது.

                “ஆற்று வளம் பெற்றிருக்கும்

   ஆ ரனங்கே

                   சோற்று வளம் பெற்றிருக்கும்

   திருவே”

“ஆற்று வளத்தாலே

                      ஆழி வளத்தாலே – செல்வம்

               ஆர்ந்த தமிழ்நாடு – பண்பு

    தேர்ந்த தமிழ்நாடு.” 

                நமது நாடு குறித்த இந்தப் பாடலின் பொருள்களை நன்குணர்ந்த குழந்தைகள் தான் பிறந்த நாட்டின் வளம் மற்றும் பெருமைகள் ஆகியவற்றை அறிந்து தங்கள் நலம் பேணும் ஆக்கச் சிந்தனைகள் பெற்றவர்களாக வளர்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

 “கிழக்கே பெரிய கடல்

  நீலம் நிறைந்த கடல்

  மேற்கே பெரிய மலை

          நீண்ட தொடர்ச்சி மலை 

                தாய்நாட்டின் எல்லையை இசைக் கலந்து பாடல் வரிகளின் மூலம் குழந்தைகளுக்கு வழங்குவது ஏற்றதாகும். இத்தகைய பற்றுமிகுந்த பாடல்களில் மூலம் நாட்டை தாயாய் போற்றும் இயல்பு தங்கள் நெஞ்சங்களில் உருவாக்கி மகிழ்வர் குழந்தைகள்.

தமிழ் மொழி

நமது தமிழ்மொழிக் கென்று இரண்டாயிரம் நூற்றாண்டு வரலாறு உண்டு. பல்வேறு வளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் பெற்றுத் திகழ்கிறது.

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக மதித்துப் போற்றப்படும் பெருமை உடையது. தாய்மொழி மீது பற்றுக் கொண்ட கவிஞர்கள் அத்தகைய உணர்வினைக் குழந்தைகளும் பெற வேண்டும் என்று விருப்பம் கொண்டு எண்ணற்றப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய பண்பைப் பெற்றுள்ளது. எனவே தான் கவிஞர்கள் தமது பாடல்களில் அதன் சீரையும் சிறப்பையும் போற்றியுள்ளனா.

       சேர சோழ பாண்டியரெல்லாம்

  ஆர வளர்த்த ஆயே வாழ்க!”

எண்ணும்ளர்ந்த உயரம்

               இசைத்த தெங்கள் தமிழ்மொழி

                 வண்ணச் சிலம்பின் கதையினை

                 வகுத்துச் சொல்லும் திருமொழி

                சேர சோழ பாண்டிய மன்னர்களால் மிகப் பெருமையுடன் போற்றப்பட்ட மொழி என்றும் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே உறவை விளக்குவதாகவும், புலப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஒரு மொழியை எந்தளவுக்கு எளிதாகக் கற்றுக் கொள்ள, எளிதில் எழுத முடிகிறதோ அந்த மொழி தான் வளாச்சி அடையும்.

        “அன்னை சொல்லித் தந்தமொழி

  அன்பொழுகப் பேசும் மொழி

    அன்னை தந்தை அத்தை மாமி

                    அருமைக் கதைகள் சொன்ன மொழி 

                 இளம் நெஞ்சில் வீரத்தையும், கதைகளின் மூலம் அன்பையும் ஊட்டிய மொழி. குழந்தைகள் பெற வேண்டிய கல்விகளுள் தலைமையானது தாய்மொழிக் கல்வியாகும். அது நமது வழி விழச் சொத்து. இயற்கையாக நமக்கு வாய்த்தச் சொத்தாகும்.

     “நூலைப்படிசங்கத் தமிழ்

  நூலைப்படிமுறைப்படி

                                                                            நூலைப்படி

             காலையிற்படி கடும் பகல்படி

                    மாலை இரவு பொருள் படும்படி

                நூல்களை எப்படி படிக்க வேண்டும். படிக்க வேண்டிய நூல்கள் எவையெவை என்பதையும் இந்தப் பாடலில் பாவேந்தர் எடுத்துரைக்கிறார்.

அழகாகச் சொல்வது கவிதைக்கு அழகு என்பர். இது இன்றியமையாதப் பண்பும் ஆகும். பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் போது நல்ல தமிழ்ச் சொற்களைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி சில அருஞ்சொற்களைக் அறிந்து கொள்ள உதவ வேண்டும். இத்தகைய பண்பு அரிய இலக்கியச் சொற்களை அறிமுகப்படுத்த உதவும்.

பாவேந்தர் தமிழ் மீதும் தமிழர் மீதும் நாட்டின் மீதும் எல்லை அன்பு கொண்டதனால் உண்டு மகிழ்வர் தமிழர் என்று நினைத்து முக்கனிகளாய் பாடல்கள் புனைந்துள்ளார்.

தமிழ் பேசு, தமிழிலே பாடுநீ

      தமிழினில் பாடியே ஆடுஎன்று  

குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறார்.

குழந்தை இலக்கியம் என்பது எவ்வகையிலும் எதார்த்த நிலையில் இருந்துவிடக் கூடாது என்பார். ருசிய அறிஞர் பாடல்களாகவும், செய்யுள்களாகவும் மனப்பாடம் செய்ய ஏற்ற வகையில் இயற்றப்பட்ட குழந்தை இலக்கியம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தான் உரைநடை வடிவம் பெற்றது. ஆனால் நாளடைவில் பல்வேறு கூறுகளாக வளர்ந்து மிகப் பெரும் இலக்கிய வகையாக உருவாகிவிட்டது. குழந்தைப் பாடல்கள் என்பது அவர்களின் மனதை ஈர்த்து, அறிவைப் புகட்டி மொழி, இன உணர்வை ஊட்டுவதாக இருந்தால் நல்லது.

துணை நூல்கள் :

 1. புலவர் இல.மா.தமிழ நாவன், பாவேந்தரும் பூந்தளிர்களும்;
 2. தே.ப.பெருமாள், சிறுவர் அமுது
 3. பூவண்ணன், பாட்டத் தோட்டம்;
 4. பாவேந்தர். இளைஞர் இலக்கியம்
 5. அழ.வள்ளியப்பா, மலரும் உள்ளம்.

—–

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

தந்தை பெரியார் ஒரு மீள் கண்டுபிடிப்பு – முனைவர் ப.கமலக்கண்ணன்

தந்தை பெரியார் ஒரு மீள் கண்டுபிடிப்பு

முனைவர் ப.கமலக்கண்ணன்

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு

“தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

          மனக் குகையில் சிறுத்தை எழும்.”

            என்ற வரிகளுக்கு ஏற்ப தென்னாட்டில் பகுத்தறிவுப் பாசறையாய்த் தோன்றியத் தன்மான இயக்கத்தின் தந்தையாகவும், மாபெரும் சீர்திருத்த இயக்கத்தின் தனிப் பெருந்தலைவராகவும் திகழ்ந்தவர் பெரியார். நடுங்கும் வயதிலும் நடுங்காத கொள்கைப் பிடிப்புகளோடு சிந்தனைப் புரட்சியையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் உண்டாக்க  அரும்பாடுபட்டவர். தன்னை இழிவு அழிவு வேலைக்காரன் என்று கூறிக் கொண்டவர். மனித இனத்தின் முன்னேற்ற வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அனைத்தையும் புறந்தள்ள முனைந்தவர். உயிரை விடவும் கொடுத்து பெற வேண்டிய மதிப்பும் பெறுமானமுமானது “தன் மதிப்பு” என்றவர்.

அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலையில் பகைவர்களின் சொல்லடி, கல்லடிகள்,  செருப்பு வீச்சு, கழிவுப்பொருள் வீச்சு போன்ற எண்ணற்ற   இடர்ப்பாடுகளையெல்லாம் தாங்கிக் கொண்டு தன்மானம் இழந்து தரிசு நிலமாகக் கிடந்த தமிழகத்தையும்இ மக்களையும் தலைநிமிரச் செய்தவர். எத்தனையே அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்த அந்தச் சீர்திருத்தச் செம்மலின் கொள்கைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் வீழ்ச்சியா? அத்தகைய வீழ்ச்சிக்குக் காரணங்கள் எவையென என்று நடுவு நிலை தவறாமல் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இருண்டு கிடந்த அய்ரோப்பாவில் ஒளியேற்றப் பாடுபட்ட வால்டேர், பிராட்லா, இங்கர்சால் போன்ற பகுத்தறிவாளர்களுக்குக் கூட பாரம்பரியமான பிறவி இழிவுகளைப் பற்றிய சிந்தனை எழவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மாந்தரிடையே புரையோடிவிட்ட ஏற்றத்தாழ்வெனும் புன்மைக்கு மருத்துவம் கண்டவர் பெரியார். தமிழகச் சூழலில் திராவிட இயக்கச் செயல்பாட்டுக்கான தேவைகள் இன்றையக் கால கட்டத்திலும் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்துத்துவம் மேலோங்கி வரும் சூழலில் திராவிட இயக்கம் தனது கருத்தியலை இன்றும் கூர்மையாக்கிக் கொள்ள முன் வரவேண்டும். சாதியை ஒழிப்பது குறித்து நம் அனைவருக்கும் ஒத்த கருத்து இருந்தாலும் சாதி ஆதிக்கத்தை முதலில் நாம் களைய முன் வரவேண்டும்.

எனவே தமிழக அளவில் திராவிட இயக்க வேர்களை எப்போதும் வெட்டி விட முடியாது. திராவிட இயக்கம் தொடக்க கால முதலே வகுப்பு வாரி உரிமையை தூக்கிப் பிடித்தால் விளைவாக விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

 • தேவதாசி முறை ஒழிப்பு
 • கைம்பெண் திருமணம்
 • பெண்ணுகளுக்கான சம உரிமை

முதலிய வற்றுக்காகப் பாடுபட்டது. நிர்வாகத்தில் பார்ப்பனர் அல்லாதார் இடம் பெறுவதற்கு திராவிட இயக்கம் முதன்மையான காரணம். மேற்கண்ட கருத்தியல்கள் மூலம் தந்தை பெரியார் இன்றும் நம்முடன் இருக்கிறார். அவரிடமுள்ள எதிர்க் கலாச்சாரச் கூறுகள் இன்று நம்மை வளப்படுத்தச் கூடியவை. பெரியாரின் சமதர்மம் என்னும் கருத்தியல் இன்று நமக்குப் பெரிதும் தேவை.

இந்தியாவின் நீண்டகால வரலாற்றில் வேதத்திற்கு எதிர்நிலையில் செயல்பட்ட வேத மறுப்பின் நீண்ட தொடர்ச்சியாகத் தான் பெரியாரை பார்க்க வேண்டும். பெரியாரின் திராவிட இயக்கம் சாதி, மதம், பார்ப்பனியம் ஆகியவற்றுக்கு முற்றிலுமான எதிர்நிலை மேற்கொள்கிறது. மனிதனுடைய பகுத்தறிவை அளவுகோலாகக் கொண்டு வாழ்வில் பல்வேறு இயல்புகளையும் நிலைகளையும், அமைப்புகளையும், சூழல்களையும், சிக்கல்களையும் அலசி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியத் தூண்டியவர் பெரியார் என்று க.த.திருநாவுக்கரசு அவர்கள் கூறுவார்.

நம்முடைய இந்தியக் துணைக் கண்டத்தில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெருகிய நிலையிலும் அண்ணல் காந்தியார் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரசு என்று பேராயக் காட்சியானது சுக்கு நூறாக உடைந்தது. காந்தியார், தான் உயிருடன் இருந்த போதோ காங்கிரசைக் கலைத்து விடுங்கள். அதன் வேலை முடிந்து விட்டது என்று தன்னுடைய “அரிஜன்” ஏட்டில் எழுதினார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகள் அறிஞர் அண்ணாவின் அரசால் 1970 வரை படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்ட அவரின் கோட்பாடுகளும் கொள்கைளும் இன்றைக்கு மேடை அளவில் மட்டுமே மக்களிடம் பேசப்பட்டு குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் வாக்குரிமை பெற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையோடு செயல்படுத்தப்பட்டு வருவது அன்றாட நிகழ்வாகிட்டது.

தங்களுடைய கட்சிகளில் “திராவிட” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட அனைத்து அரசியலாரும் அத்தகைய ஒன்றுப்பட்ட நிலையைத்தான் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர். பெரியாரின் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற அனைத்து கட்சிகளும் அரசியல் ஆதாயத்தை விரும்பிச் சென்றவை தாம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் அவர்கள் அனைவரின் நிலையையும் தடுமாற்றத்துடன் இயங்கி வருவதை நாம் ஒவ்வொரு நாளும் உள்வாங்கி வருகிறோம்.

 • அரசியல் ஆதாயம்
 • தன் நல வேட்கை
 • தன் விளம்பரம்
 • பொதுத் தொண்டில் ஒழுக்கமின்மை

போன்ற இத்தகைய இழிவான குணங்களுக்கு ஆட்பட்டு அந்த மனிதநேய மாமனிதரின் நிலையான கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப மக்களை திருப்திப்படுத்தும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் எடுத்துரைத்த பல அறிவுரைகளையும் கூர் நோக்கு கருத்தியல்களையும் தமிழின இயக்கங்களும் திராவிடக் கட்சிகளும் புறக்கணித்து வருவது வேதனைக்குரியது. இனிமேலாவது எதிர்கால நலன் கருதி தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் குறித்த அவரது கருதுகோள்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். பெரியாரின் பெயரை முன்னெடுத்து அரசியலில் இலாபம் அடைவது மட்டுமே இலக்காகி விடக் கூடாது.

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய திராவிட அரசியலாளர்கள் பெரியாரிய கருத்துகளை உண்மையாக மதிப்பவர்களாக இருப்பின்,

 • அனைவரும் இலவசக் கல்வி என்பதை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
 • தமிழ் மொழியை பயிற்று மொழிஇ ஆட்சி மொழியாக்குவதில் முழுமை பெற்றிருக்க வேண்டும்.
 • பிற மொழியிலுள்ள அறிவார்ந்த நூல்களைத் தமிழுக்குக் கொணர்ந்திருக்க வேண்டும்.
 • மதுவின் மூலம் அரசு வருமானத்தைப் பெருக்குவதை இழிவாக நினைத்திருக்க வேண்டும்.
 • சாதியக் கட்சிகளோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 • மதவாத உறவு அறுபட வேண்டும்.
 • அறிவியலின் புதுமைகளை வரவேற்று ஆராதிக்க வேண்டும் போன்ற சமுதாய நலன்களைப் புறந்தள்ளி மக்களிடம் வாக்குகளை மட்டும் பெற நினைக்கும் போக்கு பெரியாரின் கொள்கைகள் இன்று நிலைபெற முடியாததற்கு காரணமாக இருந்து வருகிறது.

இத்தகைய போக்குத் தொடருமானால் வருங்காலத்தில் பெரியாரின் தனித்துவங்களும், அவரின் மனித நேயப் பண்புகளும் மறைத்து அந்த மாண்புமிகு மனிதரின் அடிச்சுவட்டை இந்த மண் மறந்து விடக் கூடிய அபாய நிலைத்தான் ஏற்படும்.

எனவே தமிழினத்தைப் பழமைப் பிடியிலிருந்து விடுவித்து புதுமைப் காற்றை நுகரச் செய்த அவரின் அறிவுக் கோட்பாடுகளும், மானிடம் தழுவிய பொதுப் பணிகளும், சமுதாயத்தில் பிறவியின் பெயரால் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமதர்மப் பூங்காற்றை உலவச் செய்த சமனியத் தத்துவங்களும் மொழியையும், இலக்கியத்தையும் மக்கள் மயமாக்கிய அந்த மாமேதையின் மகத்துவமும் என்றென்றும் இம்மண்ணில் நிலைபெற வேண்டும். இந்த மானுடச் சமுதாயம் பயனுற வேண்டுமானால் போலிகளைக் களைத்து விட்டு, அனைத்துத் தரப்பினரும் விருப்பு வெறுப்புகளை மறுத்து, சாதியைக் கடந்து, மதத்தை மறந்து, பிரிவினையைத் துறந்து, மக்களின் மேன்மை ஒன்றையே கருது கோளாகக் கொண்டு சமுதாயப் பணியாற்ற முன் வரவேண்டும்.

பார்வை நூல்கள்:

1.பெரியார், ஈ.வெ.ரா, தமிழும் தமிழலக்கியமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,50.ஈ.வெ.கி.சம்பத் சாலை,சென்னை-7, முதற்பதிப்பு, 1963.

2.பெரியார், ஈ.வெ.ரா, மொழியும் அறிவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சுர நிறுவனம், திருச்சி-17, இரண்டாவது பதிப்பு, 1974.

3.நன்னன்இமா., பெரியாரியல், இலக்கியம்(3) ஞாயிறு பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை-108,1993

4.அறவாணன்.க.ப.,தமிழர் சமுதாய வரலாறு, பச்சைப்பசேல், புதுச்சேரி-5, 1995

5.கேசவன், கோ.,திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும், அன்னம் வெளியீடு, சிவகங்கை-60, முதற்பதிப்பு,1991.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

பெரியாரியக் கோட்பாடு ; திருக்குறள் – முனைவர் ப.கமலக்கண்ணன்

பெரியாரியக் கோட்பாடு ; திருக்குறள் – முனைவர் ப.கமலக்கண்ணன்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....